ஸொபுக்வெ

(அவரது இறப்பையொட்டி)

டொன் மற்றேரா

நமது துன்னங்களும்
நமது கண்ணீருமே
அவருக்கு ஊட்டமளித்து உயிரோடு வைத்திருந்தன
கொன்றது அவர்டகளுடைய சட்டமே

அவரது நினைவிற்குச் சுமையேற்றுமாறு
ஒப்பாரிகள் பாடற்க
நினைவாலயங்கள் எழுப்பற்க
அவர் போன்ற ஞானிகட்கு
அவர்களது புகழ்கூறக்
கல்லறைகள் தேவையில்லை

அவர் நேசித்த மண்ணையும்
எதற்காக உயிரீந்தாரோ அந்த நாட்டையும்
அவர் நோக்குமாறு
உயர்ந்த மலையொன்றின் மீது அவரைக் கிடத்துங்கள்

மனிதர் அவருடைய ஆன்மாவின் நெருப்பினை அஞ்சினர்

[றொபேட் மங்காலிஸோ ஸொபுக்வெ (Robert Mangaliso Sobukwe,  5.12.1924 – 27.2.1978) தென்னாபிரிக்க நிறவாத விரோத, எதிர்ப்பரசியற் செயற்பாட்டாளராவார். டொன் மற்றேரா (Donato Francisco Mattera, பிறப்பு 1935) ஒரு தென்னாபிரிக்கக் கவிஞரும் நூலாசிரியருமாவார். தமிழில்: சி. சிவசேகரம்]

என்னத்தச் சொல்ல…

அழ. பகீரதன்

விசுக்கென்று எனக்கு வருகுது கோபம்
பொசுக்கென்று பொத்தி அடிச்சா என்ன
கேற்றுக்க நிக்கினம் கூப்பிடுகினம் பேர்சொல்லி
ஆற்றா  அவனெண்டு பாக்க போனா
பேப்பர்த் துண்டோடை எல்லோ நிக்கினம்
காப்பார் கடவுள் எண்டோ சொல்லுகினம்
நாடிவந்தவை காசல்லோ கேட்டு நிக்கினம்

வீழுகின்ற செல்லுக்கஞ்சி ஓடியோடி அலுத்து
ஆளுகின்ற பரப்புக்கு வக்கற்று வந்த சனத்துக்கு
சோறாக்கி கொடுப்பதற்கே காசாக்கும் எண்டால்
கொடுக்காமல் ஏனோ கோபத்தைக் காட்டிறீர்’
என்று நீரோ விளங்காமல் கேட்கிறீர் போங்காணும்
சந்தியில முந்தி இருந்த வெற்று வளவில
கெந்திப் பிடிச்சு விளையாடின நிலத்தில
கொங்கிறீற்று போட்டு கோயில் கட்டியாச்சு
முன்னால இப்ப வானை முட்டுமாப்போல
கப்பல்ல வந்த சீமந்தை குழைச்சு குழைச்சு
கட்டிடம் கட்டினம் பாக்கல்லையோ நீங்க
தனவந்தர் ஒருத்தர் உவந்தீந்து தேராக்கித்
தந்தவர் அதைக் காக்கவோர் கட்டிடம் எழும்புது
பங்களிப்பு கேட்டல்லோ பேப்பரோடை நிக்கினம்
அந்தரப் படுகிற சனத்துக்கு ஆண்டவன் இல்லையோ
என நான் கேட்க
உங்களுக்கு ஏனிந்த வீறாப்பு பேசாமக் கிடவுங்கோ
என்ர மனிசியல்லோ வாயைப் பொத்துறா!

செத்த சனங்களின் பிணங்களின் மேலேறித்
தேரோட
வீதிமருங்கில் அரோகரா என ஆலிக்க
அருள் பாலிப்பான் பகவான் எனச் சொல்வரெனில்
பேந்தேன் பேசுவான்

(நன்றி: தாயகம், ஏப்ரல் – ஜூன் 2009)

பல்லினத் தேசியம்

நவகொலனியத்தின் கீழ்த் தேசியமும் தேசமாதலும்
பல்லினத் தேசியம்

இமயவரம்பன்

தேசம் என்ற கருத்தாக்கம் முதலாளியத்தை ஒட்டி விருத்தியான அதே வேளை, நவீன முதலாளிய அரசின் விருத்தி, பலவாறான நடை முறைகளினூடு, பல்வேறு இனக்குழுமத் தேசிய அடையாளங்கள் நசுக்கப்பட வகை செய்தது.

கோணிஷ், வெல்ஷ், ஸ்கொட்டிஷ் இனக்குழுமஃதேசிய அடையாளங்களின் வீழ்ச்சிகளின் துணையுடனேயே பிரித்தானியத் தேசிய அடையாளம் எழுச்சி பெற்றது. ஐரிஷ் மக்களது கேலிக் மொழியின் இடத்தை ஆங்கிலம் வலுக்கட்டாயமாகப் பிடித்துக்கொண்ட பின்பும்,  ஐரிஷ் மக்கள் பிரித்தானியத் தேசிய அடையாளத்துக்குள் கரைவதைத் தவிர்த்துள்ளனர். பிரித்தானியரது கொடூரமான ஒடுக்கு முறையினதும் சுரண்டலினதும் காரணமான வெறுப்பிற்கும் அப்பால், மத வேறுபாடும், (கடலாற் பிரிக்கப்பட்டிருந்த வகையில்) புவியியலும் தத்தமக்குரிய பங்கை அதற்கு வழங்கின.

நகர் சார்ந்த ஒரு சிறுபான்மையினர் மட்டுமே சரளமாகப் பேசிய ஒரு மொழியான, ‘அதிகாரபூர்வமான பிரெஞ்சு’ தவிர்ந்து, பிரான்சில் பேசப்பட்ட அனைத்து மொழிகளையும் அமுக்குவது நெப்போலியனின் கீழ் வடிவமைக்கப்பட்ட பிரெஞ்சுத் தேசியத்துக்குத் தேவையாயிற்று. இனக்குழும, மொழி அடையாளங்களை நசுக்குவதில் ஸ்பானிய அரசு அவ்வளவு வெற்றிபெறவில்லை. எனவே கற்றலன், பாஸ்க் என்பன உட்பட்ட மொழிகள் சில இன்று அரை-அரசகரும மொழித் தகைமை யுடனும் வேறு சில தேசிய மொழிகளாக வரன்முறையாக ஏற்கப் பட்டுமுள்ளன. மறுபுறம், போர்த்துக்கல் மிரான்டிய (மிரான்டிஸ்) மொழியை மட்டுமே பிராந்திய மொழியாக ஏற்கிறது. இத்தாலியில் ற்றஸ்கனியில் ஆதிக்கஞ் செலுத்திய மொழியாக (அல்லது பிரதேச மொழியாக) இருந்துவந்த ‘இத்தாலிய’ மொழியே 1861ல் இத்தாலி ஒருமைப்படுத்தப்பட்ட பின்பு அதன் பிரதான மொழியாகியது. எனினும் பிரதேச மொழிகள்ஃகிளைமொழிகள் இன்னமும் தொடருகின்றன. 2007ல் இத்தாலிய மொழி நாட்டின் அரசகரும மொழியாக்கப்பட்ட போது, பாராளுமன்றத்திற் கணிசமான எதிர்ப்பு இருந்தது. ஆனால், ஜேர்மன் மொழி இத்தாலிய மொழியினும் வெற்றிகரமாக ஜேர்மனியிலும் வெளியிலும் தராதரமான மொழியாக ஒருமைப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவில், ரஷ்ய சமஷ்டி அரசின் அரசகரும மொழியாக ரஷ்ய மொழி உள்ள போதும், 1917ம் ஆண்டின் பொல்ஷெவிக் புரட்சிக்குப் பின்பு தொட்டு இருபதுக்கு மேற்பட்ட பிராந்திய மொழிகள் இன்னமும் இணை-அரசகரும மொழித் தகைமையைக் கொண்டுள்ளன.

மேற்கண்டவாறு, பல ஐரோப்பிய நாடுகளில், தேச அரசின் தோற்றமும் முதலாளியத்தின் விருத்தியும் சேர்ந்து, ஒவ்வொரு நாட்டிலும் ஓரு ஆதிக்க மொழியினது அல்லது பொது மொழியினது தோற்றத்திற்கு வழி செய்துள்ளன. சிறுபான்மை மொழிகளும் கணிசமான அளவிற்கு இனக்குழும அடையாளங்களும்  ஓரங்கட்டப் பட்டதில் முதலாளியப் பொருளியற் செயற்பாடுகளின் விரிவாக்கம் தீர்மானமான பங்கு வகித்துள்ளபோதும், இனக்குழும, மொழி அடையாளங்களை நசுக்குவதில் அரசு ஒரு கருவியாக இயங்கியுள்ளது. அரச ஒடுக்குமுறையினதும் பின்தங்கிய முதலாளிய வளர்ச்சியினதும் பின்னணியில், ஐரோப்பாவின் சில பகுதிகளில், இனக்குழும, மொழி அடையாளங்கள் தேசிய அடையாளங்களாகவும் பிரிவினைவாத இயக்கங்களாகவும் உருப்பெற்றுள்ளன.

மொழியைக் கிளைமொழியினின்று வேறுபடுத்துவது எது என மொழியியலாளர்கள் இன்றளவும் விவாதிக்கின்றனர். எனினும் எழுத்தறிவின் உயர்வும் பொதுவான கல்விமுறையும் தொழில் விருத்தியும் பொருளியற் செயற்பாடுகளின் விரிவாக்கமும் சனங்களின் இடப்பெயர்வாற்றலும் கிளைமொழிகளையும் பிரதேச மொழிகளையும் பலவீனப்படுத்தியோ ஓரங்கட்டியோ உள்ளன. இவ்வாறு, விருத்திபெற்ற முதலாளிய நாடுகளில் ஒரு பொது மொழியின் தோற்றத்துக்கு முதலாளியம் உதவியுள்ளது. பன்மொழி அடையாளமுள்ள, விருத்தி பெற்ற முதலாளிய நாடுகள் இன்னமும் உள்ளபோதிலும், மூன்றாமுலக நிலைமைகள் மேற்கண்டவற்றினின்றும் வேறுபட்டுள்ளன.

தென்னாசியாவில் ―தனது உச்ச நிலையில் இந்தியத் துணைக் கண்டம் பரவலும் அதற்கப்பாலும் பவுத்தத்தைப் பரப்பும் கருவியாக இயங்கியதான― மௌரியப் பேரரசும் ―சகிப்புப் பண்பற்ற விஸ்தரிப்பு வாதிகள் முதலாக சகிப்புமிக்க அக்பர் போன்ற ஆட்சியாளர்களைக் கொண்ட― முகலாயப் பேரரசும் (இடையிடையே ஆக்ரோஷமான மதப்பரப்பலில் ஈடுபட்ட போதும்) இனக்குழும, மொழி அடையாளங் களை நசுக்கவில்லை. அதிவலிய தென்னிந்தியப் பேரரசாளன சோழப் பேரரசும் ―கைப்பற்றிய நாடுகளில் நடத்திய கண்மூடித்தனமான கொள்ளையடிப்பின நடுவிலும்― இனக்குழும, மொழி அடையாளங் களை அழிக்க முற்படவில்லை. எனினும், மதமாற்றமும் பண்பாட்டு மேலாதிக்கமும் அந்நிய ஆதிக்கத்திற்குட்பட்ட சமூகங்களின் மீது நீடித்த பாதிப்பை ஏற்படுத்தின. சீனப் பேரரசுகள் உட்டபட்ட கிழக்காசியப் பேரரசுகளைப் பற்றியும் மேற்கண்டவாறே கூற இயலும். அழிவுத் தன்மை மிகக் கொண்ட தொடக்கக்கால மொங்கோலியப் பேரரசும் உள்ளுர் அடையாளங்களை அழித்துவிடவில்லை.

நிலவுடைமைப் பேரரசொன்று இன ஒழிப்பில் இறங்காதிருந்தால், அதன் காரணம், ஆட்சியாளரின் கருணையல்ல. மாறாக, அச் செயல் தேவையற்றதும் பேரரசின் நவன்கட்கு ஒவ்வாததும் என்பதேயாகும். அமெரிக்கக் கண்டங்களிலும் அவுஸ்திரேலியாவிலும் ஐரோப்பியக் கொலனியம் தனது பிரதேச விஸ்தரிப்புக்காக இனப் படுகொலையில் இறங்கியது. ஆபிரிக்கா, மூலப்பொருள் வளங்கட்கு மட்டுமன்றி ― ஒப்பந்தக் கூலியாட்களின் தோற்றுவாயாக ஆசியாவின் சில பகுதிகள் அமைந்தவாறு― அடிமைகள் என்ற வகைக்குரிய கூலி உழைப்பிற்கும் மாபெரும் தோற்றுவாயாக மாறியது. இனக்குழும, மொழி அடையாளங்களின் மீதான ஐரோப்பியக் கொலனியத் தாக்கத்தின் தன்மை பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபட்டதுடன் வரலாற்றுக் காலத்துடனும் வேறுபட்டது. முதலாளியப் பொருளாதார வளர்ச்சியும் கொலனியக் கைப்பற்றலும் இணைந்து செயற்பட்டதால், அத் தாக்கம் அதற்கு முந்திய பேரரசுகளின் ஆக்கிரமிப்புக்களினதும் பிரதேச விஸ்தரிப்புக்களினதும் தாக்கங் களினும் பெரிதாயிருந்தது.

ஒரு சமூகம் முழுவதுமோ அதன் ஒரு பகுதியோ முற்கூறியவாறு கொலனிய வல்லரசின் பொருளாதாரச் செயற்பாட்டினுள் உள்வாங்கப் படும் போது, அது கொலனிய வல்லரசின் பண்பாட்டு மேலாதிக்கத் துக்கும் உட்படுகிறது. அத்துடன், சமுகத்தின் வெவ்வேறு பிரிவினரின் பண்பாட்டு அடையாளங்களில் ஏற்படும் பெரும் மாற்றங்களுடன் புதிதாக ஏற்கப்பட்ட மத, மொழி, பண்பாட்டு அடையாளங்களின் அடிப்படையில் தனித்துவமான இனக்குழுமங்களும் தோன்றுகின்றன. நேரடியான கொலனியத் தொடர்பற்றிருந்த சமூகங்கள் ஒப்பிடுகையில் தனிமைப்படுத்தப்;பட்டு, விளிம்பு நிலையியில் வைக்கப் பட்டிருந்த போதிலும், கொலனியம் நவகொலனியமாகியபோது  தீவிரமடைந்த அச் சமூகங்களின் பொருளாதாரச் சுரண்டல், ஏகபோக மூலதனம் பூகோளமயமானதை அடுத்துப், புதிய உச்சங்களை எட்டியுள்ளது.

மூன்றாம் உலகின் பெரும் பகுதியில், கொலனியக் கைப்பற்றலுக் கெதிரான தொடக்கநிலை எதிர்ப்பு முறியடிக்கப்பட்ட பின்பு, குறிப்பாக முதலாளிய விஸ்தரிப்புச் சூழலில், கொலனியக் குறுக்கீடு, வழக்கில் இருந்த நிலவுடைமைச் சமூக ஒழுங்கையும் நிலவுடைமைக்கு முந்திய சமூக ஒழுங்கையும் சகித்துக்கொள்ளக் கூடியதாக மாறியது. கொலனிய நலன்கட்குக் கேடில்லாத அளவில், பழைய சமூக அதிகார அடுக்கைப் பேணுவது கொலனியத்துக்கு வசதியாயிருந்தது. அதன் பயனாக, மேற்கு ஐரோப்பாவில் முதலாளியத்தின் கீழ் நடந்தது போல இனக்குழுமங்களும் உள்நாட்டுச் சமூகங்களும் சங்கமமாவது இயலாமற் போயிற்று. அதனாற், சிறிய பிராந்தியங்களும் நாடுகளுங் கூடப், பெருந்தொகையான தனித்துவமான இனக்குழுமங்களையும் மத, சாதிக் குழுக்கள் உட்பட்ட சமூகங்களையும் கொண்டுள்ளன.

தனித்துவமான ஒவ்வொரு இனக்குழுமத்தையும் ஒரு தேசமாகவோ தேசிய இனமாகவோ கருதி, அதன் அடிப்படையில், சுரண்டலுக்கும் ஓடுக்குதலுக்கும் தீர்வாகப் பிரிவினையைப் பரிந்துரைக்கும் போக்குச் சிலரிடையே உள்ளது. தேசம் என்ற கருத்தாக்கத்தையும் அதன் வரலாற்று விருத்தியையும் பற்றிய அறிவின் போதாமையையே அது குறிக்கிறது. பேணக்கூடிய பொருளாதாரத்தையும் அரசு என்பதன் இயல்பையும் பற்றிய கேள்விகளை இவ்வாறான ஆலோசனைகள் கருத்திற் கொண்டிருப்பது அரிது. தனது அரசியல் இருப்பின் பாங்கைத் தீர்மானிக்க ஒரு இனக்குழுமத்துக்குள்ள உரிமையை ஏற்கும் அதே வேளை, சுயநிர்ணய உரிமை என்பதை வெறுமனே பிரிந்துபோவதற் கான உரிமை எனக் குறுக்கிவிட இயலாது.

மாக்ஸிய நோக்கில், சுயநிர்ணய உரிமை என்பது பொதுவான தேவையைக் கொண்ட தேசங்களையும் தேசிய இனங்களையும் ஒனறுபடுத்துவதற்கான பயன்வலிவுள்ள ஒரு வழிமுறையாகும். இன்றைய சூழலில், அப் பொதுத் தேவை, ஏகாதிபத்திய, மேலாதிக்கச் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் எதிர்த்து நிற்பதாகும். எனவே சுயநிர்ணய உரிமை என்பதை அதன் மெய்யான உட்பொருளில் நோக்கித், தனித்தனியே அரசுகளாக அமைவதற்கு வாய்ப்பற்ற தேசிய இனங்களுக்கும் தேசிய சிறுபான்மை யினருக்கும் பிற சமூக-இனக்குழுமப் பிரிவினருக்கும் பிரயோகிப்பது முக்கியமானது.

மற்றொரு அந்தத்தில், தொடர்ச்சியான பிரதேசமொன்றை மறுப்பதன் மூலமும் சனத்தொகையின் பல்வேறு பிரிவினரை வலிந்து தன்வசமாக்கியும் பண்பாட்டு, மொழி, மத உரிமைகளை மறுத்தும், பிற தேசிய, இனக்குழும அடையாளங்கள் அனைத்தையும் நசுக்க முற்படும் ஆதிக்கத்திலுள்ள அல்லது பெரும்பான்மை இனத்தின் பேரினவாதம் உள்ளது. இத்தகைய ஓடுக்குமுறை மக்களைப் பிளவு படுத்தும் அதே வேளை சுரண்டும் வர்க்கங்கனினதும் அவற்றின் ஏகாதிபத்திய எசமானர்களதும் கைகளை வலுப்படுத்துகிறது.

ஒவ்வொன்றும் தன் தனித்துவத்தைப் பேணும் வெவ்வேறு இனக்குழுமங்கள் ஒரே பிரதேசத்தைப் பகிரும் நிலைமைகள் பல நாடுகளின் தொல்குடிப் பிரதேசங்களில் உள்ளன. பொருளியற் செயற்பாடுகளின் அளவும் இனக்குழுமங்களிடையிலான ஊடாட்டத்தின் தன்மையும் இதுவரையும் அடையாளங்களின் ஒன்றிணைவையோ எந்த அடையாளத்தினதும் நீக்கத்தையோ அவசியமாக்கவில்லை. அதே வேளை, வணிகமும் நகர மயமாக்கமும், இனத்துவ-மொழி அடையாள அடிப்படையிலான புவியியல் எல்லைகளைக் கலங்கலாக்கியுள்ளதுடன் ஒரு பிரதேசத்தில் பல்வேறு இனக்குழுமங்கள் கூடி வாழ்வதையும் பன்மொழிச் செயற்பாட்டையும் இயலுமாக்கியுள்ளன.

பன்மொழிச் செயற்பாடென்பது பல்லினக்குழுமச் சமூகமொன்றின் உறுப்பினர் ஒவ்வொருவரும் பன்மொழிப் பலமையுடையோராயிருப்பர் என்பதல்ல. மாறாகச், சனத்தெகையின் பெரும் பகுதியினர் தமது பல்வேறு சமூகச் செயற்பாடுகட்கு வௌ;வேறு மொழிகளைப் பயன்படுத்துவோராயிருப்பர் என்பதையே அது குறிக்கிறது. இத்தாலியர் பலரும் அமெரிக்கக் கறுப்பினத்தவர் பலரும் ‘தராதரமான மொழியை’ அலுவலகத் தேவைகட்கும் பிற சமூகத்தினருடன் உறவாடுவதற்கும் பயன்படுத்துகிற அதே வேளை, தமது சமூகத்தினருடன் உihயாடும் போது, ―பெரும்பாலும் பிற சமூகத்தினருக்கு விளங்காத― தமது கிளைமொழிக்கு மீளுகின்றனர். நவீனமாதலும் இடப்பெயர்வும் கிளைமொழிகளின் பங்கைக் குறைத்துள்ள போதிலும், கவனத்திற் குரியது ஏதெனின், முன்னேறிய முதலாளிய நாடுகளிலும், மொழி அடையாளங்கள் தாக்குப் பிடித்துள்ளன என்பது தான்.

முன்னேறிய முதலாளிய நாடுகளில் உள்நாட்டு மொழியொன்றோ கிளைமொழியொன்றோ பொதுமொழியாகியுள்ளதெனில், மூன்றாமுலக நாடுகள் பலவற்றில், இந்தியாவின் பல மாநிலங்களிற் காணக்கூடியன போன்ற வலுவான மொழிவழித் தேசிய உணர்வுகளையும் மீறி,  முன்னாட் கொலனிய எசமானர்களின் மொழியே பொதுமொழி என்ற பங்கை வகித்துவருகிறது. கொலனியாட்சிக் காலத்திலும் அதையடுத்த குறுகிய காலப்பகுதியிலும், கொலனிய எசமானர்களின் மொழியின் ஆதிக்கத்திறகான காரணம், அரச அலுவல்களிலும் உள்நாட்டு மேட்டுக்குடிகளின் பொருளாதார, அரசியற் செயற்பாடுகளிலும் கல்வியிலும் நவீன தொழிற் துறைகளிலும் அச்சு ஊடகத்திலும் அந்த மொழியே முன்னிலை வகுத்தமையாகும். கொலனித்துவம் நவ கொலனித்துவத்துக்கு வழிவிட்ட போது, முன்னாள் பிரித்தானியக் கொலனிகளில் ஆங்கிலம் தனது இடத்தை உறுதிப்படுத்திவிட்டது. பூகோளமயமாக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தின் கீழ், ஆங்கிலத்தின் அமெரிக்க வடிவம் முன்னாட் கொலனிகளிலிருந்து பிற ஐரோப்பிய மொழிகளைப் படிப்படியாக ஓதுக்கிவருகின்றதற்கும் மேலாக, மூன்றாமுலகில் நேரடிக் கொலனியாட்சிக்கு உட்படாத பகுதிகளிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

இவ்வாறு, மூன்றாமுலக நாடுகள் பலவற்றில் வணிகச் செயற்பாடுகளிலும் அரசுகட்கிடையிலான அலுவல்களிலும் அரசுக்கு உட்பட்ட அலுவல்களிலும் ஆங்கிலமே ஆதிக்க மொழியாக இருப்பது பற்றி மேட்டுக்குடி வர்க்கங்கள் நிறைவுடன் இருக்கும் ஒரு நிலையை நாம் வந்தடைந்துள்ளோம். அத்துடன், தென்னாசியாவினதும் தென்கிழக்காசியாவினதும் மேட்டுக்குடி வர்க்கங்கள் வெளிப்படுத்தும் வலுவான தேசியவாத உணர்வுகள் ஒருபுறமிருக்கப், பெருவாரியாக, அரசுகளின் அலுவல்களில் நிசமான ‘பொது மொழியாக’ இருப்பது தேசிய மொழிகளில் எதுவுமல்ல. எனவே, மொழிப் பிரச்சனை என்பது, அந்நிய மொழிகள் தேவையற்றவை என்றோ விரும்பத்தகாதவை என்றோ இல்லாது, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலுக்கான அழுத்தம் என்ற வகையில், நவகொலனியத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கியமாகிறது. எனினும், மூன்றாமுலகின் பல்லினச் சமுதாயங்களில் மொழிப் பிரச்சனை முன்வைக்கப்பட்டு வந்துள்ள விதமானது, மொழிகள் தம்மிடையே மேலாதிக்கத்திற்காகக் கடும் போட்டியிடும் அதேவேளை, ஆங்கிலத்தினதோ நவகொலனிய எசமானர்களது வேறெந்த மொழியினதோ ஆதிக்கத்தைக் கேள்வியின்றிப் பணிவுடன் ஏற்கும் போக்கிற்கு வழிவகுத்துள்ளது.

எனவே, நவகொலனிய ஆதிக்கத்தினதும் சுரண்டலினதும் அதற் கெதிரான விடுதலைப் போராட்டத்தினதும் பின்னணியில் மூன்றா முலகின் தேசியப் பிரச்சனையைக் கையாளும் போது, நவகொலனியச் சக்திகளதும் நிலடைமை-முதலாளிய மேட்டுக்குடிச் சக்திகளதும் கூட்டணி ஒன்றின் ஒடுக்குமுறைக்குட்பட்ட நாடுகளதும் பிரதேசங் களதும் புறநிலை யதார்த்தத்தின் அடிப்படையில் தேசிய அடையா ளத்தை மீளாயவும், தேவையானபோது, மீள வரையறுக்கவும் வேண்டி யுள்ளது.

தேசம் என்பது தனியான ஒரு இனத்தையோ இனக்குழுமத்தையோ கொண்டது என வரையறுத்து அதிலிருந்து தொடங்கி அந்தத் தேசத்திற்குப் பிரிவினையையோ பிரிந்துபோகும் உரிமையையோ கோருகிற ஆபத்தான ஒரு போக்கு உள்ளது. இந்த அணுகுமுறையின் தர்க்கரீதியான அந்தம் எதுவெனின் மூன்றாமுலக நாடுகளிற் பெரும்பாலானவற்றைப் பல தேச அரசுகளாகக்; கூறுபோடுமாறு ―சில வற்றை நூற்றுக்கணக்கான துண்டங்களாக்குமாறு― கோருவதாகும். இவ்வாறான கூறாக்கல் நிச்சயமாக ஒடுக்கப்பட்ட வெகுசனங்களின் நன்மைக்கானதல்ல.

எனவே, முதலாளிய விருத்தி குறைபாடான சமூகங்களில், தமக்குப் பொதுவான ஒரு தொடர்ச்சியான பிரதேசத்தைக் கொண்டிருப்பதுடன் இனக்குழும வேறுபாடுகட்கிடையிலும்; தம்மை ஒரு சமுகமாக உணர்வதற்கும் மேலாகத், பூகோளமயமாக்கப்பட்ட மூலதனத்தினின்றும்  ‘பெருந் தேச’ ஒடுக்குமுறையினின்றும் தம்மைப் பாதுகாக்கும் தேவையைக்; கொண்ட மக்களின் பொதுவான நலன்களின் பின்னணியில், தேசங்களையும் தேசிய இனங்களையும் அடையாளங் காண முயல்வது அவசியமாகிறது. மொழி என்பது பிளவுபடுத்தும் சக்கியாக இருக்க வேண்டியதில்லை. இனக்குழுமங்கள் கூடி வாழ்ந்து சில மொழிகளைப் பகிருகிற போது, அப் பொதுமை, பொதுவான ஒரு மொழியின் இடத்தில், பொதுவான அல்லது பகிரப்படுகிற மொழிகள் என்ற அடிப்படையில் ஒரு தேசத்தையோ தேசிய இனத்தையோ வரையறுக்கப் பயன்படலாம்.

உழைப்பாளரின் இடப்பெயர்வாலும் போர், தேசிய ஒடுக்குமுறை, இயற்கை அனர்த்தங்கள், பொருளாதார நெருக்கடிகள் என்பன உட்பட்ட காரணங்களால் நிகழும் கட்டாயமான குடிப்பெயர்வுகளாலும்,  பல்லினச் சமுதாயங்கள் என்பன முன்னெப்போதையும் விடப் பெரிய யதார்த்தமாகியுள்ளன. எவ்வாறாயினும், இன்றைய ஏகாதிபத்திய ஆதிக்கச் சூழலில், பல்லினச் சமுதாயங்கள் தம்மைப் பல்லினத் தேசங்களாகவோ தேசிய இனங்களாகவோ பேணிக்காக்குமாறு ஊக்குவிப்பது முக்கியமானதாகும்.

இனக்குழும அடையாளத்தின் அடிப்படையில் பல்லினச் சமுதாயங்களைப் பிளக்கும் முயற்சிகட்கெதிராகவும் அதே வேளை, தேசிய ஒற்றுமை என்கிற பேரில் எந்த இனக்குழுமத்தினதும்  அடையாளத்திற்கான உரிமையை மறுப்பதற்கெதிராகவும் விழிப்புடன் இருப்பது அவசியமாகும்.

தோட்டத் தொழிலாளர் வேதனம்

தோட்டத் தொழிலாளர் வேதனம்:
அகப், புறச் சூழ்நிலை குறித்த ஓர் பார்வை

A.R.C. ஜோன்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பதற்காக இரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் பெருந் தோட்டத் துறைத் தொழிற்சங்கங்கட்குமிடையே கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்படுகின்றது. இறுதியான ஒப்பந்தம் 2011ம் ஆண்டு ஜுன் 5ம் திகதி கைசாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாகத் தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளமாக 380 ரூபாவும் 75 சதவீத நாட்களுக்கு மேல் வேலைக்கு சென்றிருப்பவர்களுக்கான வரவுக் கொடுப்பனவாக 105 ரூபாவும் தேயிலை விலைக்கான கொடுப்பனவாக 30 ரூபாவும் உட்பட மொத்தச் சம்பளமாக 515 ரூபா இந்தப் புதிய கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.

கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பமிடுகின்ற தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களிடையேயும் 500 ரூபாய் அடிப்படைச் சம்பளம் நிர்ணயிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடே இருந்து வந்தது. பொதுவாக, ஊடகங்கள் வாயிலாக வந்த அறிக்கைகளில் 500 ரூபாவுக்கு மேல் அடிப்படைச் சம்பளம் நிர்ணைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்பட்டது. இறுதியில் 400 ரூபா அடிப்படை சம்பளங் கூட நிர்ணயிக்கப்படாமை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றில் தொழிலாளர் தரப்பில் கோருகின்ற சம்பளம் கிடைத்ததில்லை. அதே நேரம் தொழிலாளர்களின் ஒற்றுமையே தொழிற்சங்கங்களின் பலமாகக் காணப்பட்டிருக்கின்றது. அதன் மூலமே பல உரிமைகள் வென்றெடுக் கப் பட்டிருக்கின்றன. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தொழிற் சங்கங்களிடையே காணப்படுகின்ற பல்வேறு கருத்து முரண்பாடுகளும் பிளவுகளும்  அவற்றின் மிகப் பெரும் பலவீனமாகவுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தின் சட்டத் தன்மை
வேதனம் உட்படத், தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகயையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வதற்காக முதலாளிகட்கும் தொழிலாளர் களின் பிரதிநிதிகளான தொழிற்சங்கங்கட்கும் இடையே கூட்டுப் பேரம் பேசப்படுவதும் அதனை அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதுமான நடைமுறைகள் உலகலாவிய முறையில் காணப் படுகின்றன. 1949ம் ஆண்டு உலகத் தொழிலாளர் தாபனத்தினால் ஏற்படுத்தப்பட்ட 98வது பிரகடனம் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து செயற்படவும் கூட்டுப் பேரம் பேசவுமான உரிமைகளை உறுதிப் படுத்துகின்றது.

1950ம் ஆண்டு 43ம் இலக்கக் கைத்தொழில் பிணக்குச் சட்டத்தின் பிரகாரம், 40 சதவீத தொழிலாளர்கள் அங்கம் வகிக்கின்ற தொழிற் சங்கங்கள் மாத்திரமே கூட்டுப் பேரம் பேசமுடியும். இலங்கையில் உள்ள நடைமுறைகளின்படி, முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற் சங்கங்களுக்கும் இடையே ஏற்படுத்தப்படுகின்ற கூட்டு ஒப்பந்தங்கள் தொழில் ஆணையாளரின் ஒப்புதலுடன் வர்த்தமானியில் பிரசுரிக்கப் படுமானால் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் காலங்களில் அதன் சட்டத் தன்மை உறுதிப்படுத்தப்படும்.

ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளை மீறுவதாக ஒரு கூட்டு ஒப்பந்தம் அமையக்கூடாது. அவ்வாறு அமையுமாயின் அதனை நிராகரிக்கும் அதிகாரம் தொழிற்சங்கங்களுக்கு உண்டு. மேலும், கூட்டு ஒப்பந்தங்கள் தொழிலாளர்களுக்குப் பாதகமாக அமையாதிருப்பதனைக் கண்காணிக்கின்ற கடப்பாடு தொழில் திணைக்களத்திற்கு உண்டு. இதுவே இலங்கை ஜனநாயகத்தில் தொழில் திணைக்களத்தின் நேர்மையான செயற்பாடாகவும் இருக்கமுடியும்.

கூட்டுப்பேரமும் கூட்டு ஒப்பந்தங்களும் ஒட்டுமொத்தமாக தொழிலாளர் வர்க்க நலன் சார்ந்தன என்று கூறமுடியாது. இருந்தும் ஒரு முதலாளித்துவக் கட்டமைப்பில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு பொறிமுறையாகவே அவற்றைக் கொள்ள முடியும். இன்றைய உலகமயமாக்கற் சூழலிலே தனியார் தொழில் நிறுவனங்கள் உச்;சக்கட்ட இலாபத்தினை அடையும் நோக்குடனேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொழிலாளி வர்க்கம் மிகமோசமாகச் சுரண்டப்படக்கூடிய நிலை காணப்படுகின்றது. எனவே, தொழிலாளர்களின் பிரதிநிதிகளாகிய தொழிற்சங்கங்க ளிடையே ஐக்கியமும், தொழிலாளர் வர்க்க நலனும், கருத்தியல் தெளிவும் இருக்கின்ற போதுதான் தொழிலாளர்களுக்குச் சாதகமான கூட்டு ஒப்பந்தத்தினை ஏற்படுத்தப்பட முடியும் என்பது யதார்த்தம்.

பெருந்தோட்டத் தொழிற் துறையின் நிலை
பெருந்தோட்டத் தொழிற் துறையினைப் பொறுத்தவரை, தேயிலை, இறப்பர் போன்ற துறைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை பார்க்கின்ற போது சாதகமான சூழ்நிலையே காணப்படுகின்றது. தேயிலைத் தொழிற் துறையில் அண்மைக் காலத்தில் விலை உயர்விலும் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க சாதகமான தன்மைகளை காணக்கூடியதாக உள்ளது.

தேயிலை உற்பத்தியில் 2006ம் ஆண்டில் இருந்து விலையில் அதிகரிப்பு  இருக்கின்றது. 2007ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு 1 பில்லியன் (நூறு கோடி) அமரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் கிடைத்திருந்தது. 2008ம் ஆண்டின் இறுதிப் பகுதிகளில் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதும், பின்பு விலையில் சாதகமான நிலையே தொடர்கின்றது. தேயிலை உற்பத்தி வரலாற்றில் மிக அதிகளவாக 318.7 மில்லியன் கிலோ தேயிலை 2010 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அதே நேரம் தேயிலை ஏற்றுமதி விலையும் கிலோவுக்கு 495 ரூபாவாக இருந்திருக்கின்றது. 2011ம் ஆண்டு நடுப்பகுதிகளில் ஒரு கிலோவுக்கான தேயிலை விலை சராசரியாக 350 ரூபாவாகவும் ஏற்றுமதி மூலமாக 530 ரூபாவாகவும் சந்தை நிலை காணப்பட்டது. தற்போது அந்த நிலையில் வளர்ச்சிக் காணப்படுகின்றது. இறப்பாத்; தொழிற் துறையில் 2010 ஆண்டு 2.9 பில்லியன் ரூபாய்கள் மொத்த வருமானம் கிடைத்துள்ளது (35 சதவீத அதிகரிப்பு). அத்துடன் இலாபம் மாத்திரம் ரூபா 129 மில்லியனில் இருந்து ரூபா 837 மில்லியன்களாக அதிகரித்திருக்கின்றது.

முதலாளிகள் தரப்பு நியாயப்படுத்தல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலை குறித்துத் தோட்டத் துறை முகாமைத்துவத் தரப்பில், தோட்டத் தொழிலாளர்கள் தரமான வாழ்க்கை வாழ்கின்றார்கள் அல்லது வாழ்வதற்கு போதுமானளவு வேதனம் கிடைப்பதாகவே பொதுவாகக் கூறுகின்றனர். இலங்கைத் தேயிலைச் சபை வெளியிடுகின்ற Tea Market Update என்ற வெளியீடு ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “பெருந்தோட்டத் தொழிற் துறையில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கையின்படி, பெருந்தோட்டப் பகுதியில் வறுமையின் நிலை ஒருசில வருடங்களில் மூன்று மடங்கு குறைந்துள்ளது. பெருந் தோட்டத் துறை  தனியார்மயமாக்கப்பட்ட 1995/1999ம் ஆண்டுக் காலப்பகுதியில் 38 சதவீதமாக இருந்த வறுமை நிலை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது”.

மேலும் தோட்டத் தொழிலாளர்களின் வருமானமும், கடந்த 15 ஆண்டுகளில் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறித், தோட்டத் தொழிலாளர்கள் தரமான வாழ்க்கை வாழ்வதாக நியாயப் படுத்துகின்றனர்.

வறுமையின் நிலை மூன்று மடங்கு குறைந்திருந்தால் அது மிகப் பெரிய சாதனைதான். அவ்வாறான நிலை இருக்குமானால் அது சமூகத்தினுடைய சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களில் பிரதிபலிக்க வேண்டும். வறுமையை வெறும் மந்திரத்தால் ஒழித்துவிட முடியாது. எனவே இப் புள்ளிவிபரத்தின் நம்பகத்தன்மை குறித்துச் சந்தேகம் எழுகின்றது. (இதைப்பற்றி இக் கட்டுரையில் ஆராயப் பட்டுள்ளது).

2006/2007ம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் படி, வறுமையின் நிலை பெருந்தோட்டப் பகுதியில் 33.3 சதவீதமாக இருந்த போது அதற்கு காரணம் தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் அல்ல வேறுகாரணங்கள் இருப்பதாக நியாயப்படுத்தினார்கள். குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் குடிப்பழக்கம் இருப்பதாக பிரசாரப்படுத்தினர். 2010ம் ஆண்டு மே மாதம் இலங்கைத் துரைமார் சங்கம் (Planters Association of Ceylon) நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தோட்டப் பகுதியில் 60 சதவீதத்திற்கு மேல் குடிப் பழக்கம் உள்ளதாகக் கூறினார்கள். அத்துடன் அங்கு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலும் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
“வறுமை என்ற பொருத்தமான பதம், எப்பொழுதும் ஒருவருடைய வருமானத்துடன் நேரடியாகத் தொடர்புடையதி;ல்லை என நான் நம்புகின்றேன். எப்பொழுதும் 30,000 ரூபாவுக்கும் மேல் வருமானத்தைப் பெற்றும், நீர் வருமானத்தைப் பொறுப்பற்ற முறையில் செலவிடுவீரானால், நீர் தொடர்ந்தும் வறுமையில் வாழ இயலும்.”

(I believe that “poverty” is a relevant term which is not directly linked always to the income of a person. You could always receive an income in excess of even Rs 30,000/- per month and still live in poverty if you spend it in an irresponsible manner).

தினமும் ஒரு தொழிலாளி வேலை செய்தலும், மேற்படி கூற்றின்படி, 30000 ரூபா வருமானத்தினைப் பெறமுடியாது. அதைவிட, இதனை ஒட்டுமொத்த சமூதாயத்திற்கும் பொதுமைப்படுத்திப் பேசுவதில் நியாயமென்ன இருக்கின்றது?.

குடிப் பழக்கம் மலையகத்தில் இருக்கின்றது தான். ஆனால் இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிகமோசமான குடிப் பழக்கம் உள்ளதெனக் கூறமுடியாது. குடிப் பழக்கத்தின் மூலம் ஏற்படுகின்ற நோய்களில் மிகப் பிரதானமானது சிரோசிஸ் (cirrhosis)  எனும் நோய் ஆகும். அந் நோயினாற் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கொழும்பு, காலி, மாத்தறை போன்ற பகுதிகளிலேயே அதிகமாக உள்ளது. அங்கு உள்ள வைத்தியசாலைகளில் அந் நோய்க்கென்று தனிப் பிரிவுகள் காணப்படுகின்றன.

பெருந்தோட்ட மக்கள் அதிமாக வாழக்கூடிய நுவரெலியா, பதுளை போன்ற பகுதிகளில் அந் நோயாற் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றது. எனவே முதலாளிகள் தரப்பில் முன்வைக்கப் படுகின்ற வாதங்களில் விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் இல்லாமல் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவிதமான விளக்கங்களைக் கொடுத்து வருகின்றார்கள்.  கடந்த 15 வருடங்களில் 500 வீதம் சம்பளம் அதிகரிக்கப் பட்டுள்ளதாகக் கூறிப் பெருமைப்படுவது சிறுபிள்ளைத்தனமானது. இக் காலகட்டத்தில் பணவீக்கம் எத்தனை மடங்கு ஏற்பட்டுள்ளது, நாணயத்தின் பெறுமதி எத்தனை மடங்கு குறைந்துள்ளது, பொருட்களின் விலை எவ்வளவு அதிகரித்துள்ளது என்பனவற்றுடன் ஒப்பிடுகையில், சம்பளம் இன்றுவரை போதாது என்பதுதான் தொழிலாளர்களின் வரலாற்றில் நாம் பெற்ற அனுபவம்.

தோட்டத் தொழிலாளர்களின் நலனில்
இலங்கை அரசாங்கத்தின் அக்கறை

அரசாங்கத்தின் புள்ளி விபரங்களும் நம்பகத்தன்மையும்
இலங்கைப் புள்ளிவிபரத் திணைக்களம்; வெளியிட்டுள்ள 2009ஃ2010ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் பின்வருமாறு கூறுகின்றன.

இலங்கையில் வறுமை நிலை 15 சதவீதத்தில் இருந்து 9 சத வீதமாகக் குறைந்துள்ளது. மேலும் இந் நிலை பெருந்தோட்டப் பகுதியில் 33.3 சதவீதத்தில் இருந்து 11.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் வறுமை, 33.8 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக, 77.6 சதவீதத்தால் குறைந்துள்ளது.

இப் புள்ளிவிபரங்கள் மக்களின் வளர்ச்சியைப்  பிரதிபலிக்க வில்லை. மாறாக மக்கள் மீது அரசாங்கத்திற்கு உள்ள பொறுப்பற்ற தன்மைகளையே பிரதிபலிக்கின்றது. குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர்களின் மீது திணிக்கப்பட்டுள்ள அடக்குமுறையின் ஒரு வடிவமாகவே இதனைக் கொள்ளமுடியும். மந்தபோஷணை, நிறை குறைந்த குழந்தைப் பிரசவம், எழுத்தறிவின்மை விகிதம், இரத்தச் சோகை, சுகாதார வசதியின்மை, சுத்தமான குடிநீர் வசதியின்மை, வீட்டு வசதிகள் இன்மை, இறப்பு விகிதம், வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை போன்றவை பெருந்தோட்டப் பகுதியிலேயே இன்றும் அதிகமாக உள்ள நிலையில் எவ்வாறு திடீரென வறுமை குறைய முடியும் என்ற நியாயமான கேள்வி எழுகின்றது.

2006/2007 காலப்பகுதியில் வறுமையின் அடிப்படையில் வளர்ச்சி யடைந்த மாவட்டங்களின் வரிசையில் (வட மாகாணம் தவிர்ந்து), நுவரெலியா மாவட்டம் இறுதி நிலையில் இருந்தது. ஆனால் இன்று அது  8வது இடத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. வறுமையினை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச வேலைத்திட்டங்கள் என்ன செய்யப்பட்டன? வறுமை ஒழிப்பிற்காக தயாரிக்கப்பட்ட  பெருந்தோட்ட அபிவிருத்திக்கான 10 ஆண்டு தேசிய அபிவிருத்தி திட்டத்திற்கு  நிதி ஒதுக்கப்படாது அத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட அபிவிருத்திக்காகச் செயற்பட்டு வந்த தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இல்லாதொழிக்கப் பட்டுள்ளது. வறுமை ஒழிப்பிற்காகவே தேசிய ரீதியில் அமுல்படுத்தபடும் திட்டமாகிய ‘சமூர்தி’ திட்டதில் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை.  ஆனால் வறுமை மாத்திரம் குறைந்துள்ளது என்பது வேடிக்கையாக இருக்கின்றது.

பெருந்தோட்ட மக்கள் இன்று தொலைபேசி, தொலைக்காட்சி, கேபிள் டீ.வி. போன்றவற்றை பயன்படுத்திக்;கொண்டு வசதியாக இருப்பதாக இதற்கு நியாயம் கூறப்படுகின்றது. பெருந்தோட்டப் பகுதியில் எல்லோரும் இவ்வாறான வசதியான வாழ்க்கை வாழவில்லை. ஆனால் இலங்கை முழுதும் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை காலத்தின் கட்டாயமாகி விட்டது.  மேலும் பெருந்தோட்டப் பகுதியில் வறுமை  குறைந்துள்ளது என்பதினைக் குறிப்பிட்டுள்ள அதே நேரம் வறுமைக்கு அடிப்படையாகிய வருமானம், போசாக்கு, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற நிலைகள் எவ்வாறு உள்ளன என்பதற்கான தெளிவான விளங்கங்கள் இல்லை.

கல்விக்கான அரசாங்கப் பங்களிப்பு
மத்திய வங்கி ஆண்டறிக்கையின்படி மொத்தத் தேசிய உற்பத்தில் கல்விக்காகச் செலவிடப்படும் தொகை வெறும் 1.9 சதவிகிதமாகும். (2009ம் ஆண்டு 2.1 சதவிகிதம்). மேலும் ஒட்டுமொத்த இலங்கையிலும் பாடசாலை கல்வியில் ஒரு ஆசிரியருக்கு 18 மாணவர் வீதம் இருப்பதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. பெருந்தோட்டப் பாடசாலைகளில் எத்தனை பாடசாலைகளில் இந் நிலைமையுள்ளது?

சுகாதாரத்திற்கான அரசாங்கப் பங்களிப்பு
சுகாதார நிலைமைகளைப் பொறுத்தவரையில் மொத்தத் தேசிய உற்பத்தியில் வெறும் 1.3 சதவிகிதமான பங்கே (2009ம் ஆண்டு 1.5 சதவிகிதம்) சுகாதாரத்திற்காகச் செலவிடப்படுகின்றது.

ஒட்டுமொத்த இலங்கையிலும் 568 அரச மருத்துவமனைகளில் 69501 நோயாளிகளுக்கான வசதிகள் (கட்டில்கள்) காணப்படுகின்றன. அதாவது, ஆயிரம் பேருக்கு 3 கட்டில்கள் வீதமே காணப்படுகின்றது. மருத்துவர்களைப் பொறுத்தவரையில் 1000 பேருக்கு ஒரு வைத்தியர் வீதமே இருக்கின்றனர். இது ஒட்டுமொத்த இலங்கையின் நிலையைக் குறிக்கின்றது.

பெருந்தோட்டப் பகுதி மக்கள் தேசிய சுகாதார சேவையில் இருந்து புறக்கணிக்கபட்ட நிலையில் இங்கு சுகாதார நிலை எவ்வாறு இருக்கும் என்பதினைப் புரிந்து கொள்ளமுடியும்.

கல்வி, சுகாதாரம் போன்ற காரணிகளில் அரசாங்கத்தின் பங்களிப்பு மிகக்குறைவாக இருப்பதே நமது நாடு அபிவிருத்தி நிலையில் பின்னடைவாக இருப்பதினை வெளிப்படுத்துகின்றது. இது இவ்வாறு இருக்கையில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் குறித்து பெருமையாக வெளியுலகிற்கு காட்டிக் கொள்வதினை முழுமையான சேவையெனக் கூறமுடியுமா?

எனவே, அபிவிருத்திக்கான பல்வேறு குறிகாட்டிகளில் எந்த விதமான வளர்ச்சிகளும் இல்லாத நிலையில், வறுமை மாத்திரம் குறைந்துள்ளது என்பதில் எந்தளவுக்கு உண்மையும்  நம்பகத் தன்மையும் உள்ளது என்பதில் சந்தேகம் ஏற்படுகின்றது. ஒரு ஜனநாயக நாட்டில் வெளியிடப்படும் புள்ளிவிபரங்கள் ஓரளவேனும் யதார்த்தத்தை பிரதிபலிப்பவையாக இருக்கவேண்டியது அவசியமாகும்.

நாட்டின் தலா வருமானமும் ஜனாதிபதியின் உறுதிமொழியும்
2011ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்ட அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றிய ஜனாதிபதியவர்கள்  நாட்டின் தலா வருமானம் வருடத்திற்கு 2375 டொலர்களாக (2010ம் ஆண்டு) காணப்படுவதாகக் கூறி;; அதனை 2016ம் ஆண்டு 4000 அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் ஒட்டுமொத்த தோட்டத் தொழிலாளர் சமூகமே நாட்டின் தலா வருமானத்திற்குக் குறைவான வருமனத்தையே பெறுகின்றனர்.

ஒரு நாளைக்கு 5 டொலர்கள் வருமானத்தினைப் பெற்றாலும் 1500 டொலர்கள் வருமானத்தையே பெறமுடிகின்றது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் வருமானம் 5 டொலர்களுக்குக் குறைவாகவே உள்ளது.  எனவே 2016ம் ஆண்டு 4000 டொலர்களாக உயருமானால் தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் உட்பட அவர்களின் வருமானத்திற்கான மார்க்கங்கள் குறித்து அரசாங்கத்தின் குறைந்தபட்ச பங்களிப்புகள் என்ன? என்ற கேள்வி எழுகின்றது. இறுதியாக நடந்த தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தையிலும் அரசாங்கத்தின் கண்டுங்காணாத போக்கினையே காணக்கூடியதாக இருந்தது.

அரசாங்கத் தோட்டங்களில் தொழிலாளர் நிலை
மேலும், அரசாங்கம் தேயிலைச் சிறு உற்பத்தியாளர்களுக்கு வழங்கு கின்ற ஊக்குவிப்புக்களின் அளவுக்கு அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தோட்டங்களில் வாழுகின்ற தொழிலாளர்களின் நலன்களில்  அக்கறை செலுத்துவதில்லை. அரசாங்கத் தோட்டங்களில் வாழுகின்ற தொழிலாளர்கள் பல்வேறு இடர்பாடுகளை அனுபவிக்கின்றனர். தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. மேலும் பல தோட்டங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.

சம்பள உயர்வு குறித்து மலையகத் தொழிற்சங்கங்கள்
இக் கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்டிருந்ததற்கு இணங்கத் தொழிலாளார்களின் ஒற்றுமையே தொழிற்சங்க போராட்டங்களுக்கு மிகப் பெரும் பலமாகக் கடந்த காலங்களில் இருந்திருக்கின்றது. ஆனால் இன்று காணப்படும் தொழிற்சங்கங்களின் பிளவுகளே தொழிலாளர்களின் மிகப்பெரும் பலவீனமாகவும் காணப்படுகின்றது.
கடந்த சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தைக காலங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டி போன்றவை வழமையாக கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் சங்கங்கள் என்ற வகையில் கூட்டு ஒப்பந்தத்தை ஆதரித்து பேசிய அதே நேரம் ஒரு அணியாகச் செயற்பட்டு வந்தன.

மறுபுறம் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஐனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் விடுதலை முன்னணி, ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் போன்ற பிற சங்கங்கள் பல இணைந்து கூட்டு ஒப்ந்த்தை விமர்சித்த அதே நேரம், சில கவனயீர்ப்புப் போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தன. மக்கள் விடுதலை முன்னணியும் பெருந் தோட்டப்பகுதியில் தேசிய ரீதியில் செயற்பட்டு வருகின்ற சில சிறு தொழிற்சங்கங்களும் சம்பள உயர்வு குறித்த பல கோரிக்ககைகளை முன்வைத்திருந்தன. மேலும், கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் குறித்துப் பல்வேறு விமர்சனங்களை ஊடகங்கள் மூலம் முன்வைத்துத் தொழிற்சங்கங்களிடையே பிளவு களை ஏற்படுத்த முயன்றவர், தற்போது நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான பின்பு  மௌனமாகியதன் மர்மம் புரியவில்லை.

ஒட்டு மொத்தத்தில், தொழிற்சங்கங்களிடையே பல வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டனவே தவிர தொழிலாளர்கள் மத்தியில் ஒரு எழுச்சி காணப்பட்டதினை அவதானிக்க முடியவில்லை. மறுபுறம் தொழிற் சங்கங்களிடையேயான முரண்பாடுகள் மேலும் அதிகரித்துச் செல்கின்றன. ஆனாலும் தொழிற்சங்கங்களின் நேர்மையற்ற தன்மைக்குப் பின்வருவனவற்றை உதாரணங்களாகக் கொள்ளலாம்.
ழூ    பொதுவாகவே மிகமோசமான சமூக விரோதச் செயல்களைச் செய்துகொண்டிருக்கும் அரசாங்கத்தை ஆதரிப்பதில் மலையகத்தில் இருக்கின்ற பெரும்பாலான கட்சிகளிடையே ஒற்றுமை இருக்கின்ற அதே நேரம் மக்கள் நலன் சார்ந்த பொது விடயங்களில் அவர்களிடையே பிளவுகள் காணப்படுவது ஏன்?

*    கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற சங்கங்கள் ஏனைய தொழிற்சங்கங்களுடன் ஐக்கியத்தினைப் பேணத் தயங்குவது ஏன்? குறிப்பாகச், சம்பள விடயத்தில் முரண்பாடுகள் தொடர்வது ஏன்?

*    கூட்டு ஒப்பந்த்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கூட்டு ஒப்பந்தம் குறித்த விமர்சனங்களையே முன் வைக்கின்றனரே தவிரச் சம்பள உயர்விற்கான ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைத்திருக்கிறார்களா? அதற்கான மாற்று வழிதான் என்ன?

*    இலங்கையில் உள்ள ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கத் திற்கே பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய தனியார்துறை தொழிலாளர் களின் ஓய்வூதிய திட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்களும் போராட்டங்களும் எழுச்சிபெற்றிருந்தன. ஆனால் இந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலம் பாதிக்கப்படும் தொழிலாளர்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மிகக் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கையில் அது குறித்து மலையக அரசியல் கட்சிகளிடையோ, பெருந்தோட்ட தொழிற் சங்கங்களிடையோ காத்திரமான எதிர்ப்புகள் காணப்படவில்லை. பலர் அதனை ஆதரித்தும் பேசுகின்றனர். இந்த உதாரணமே அரசாங்கத் தினை எதிர்ப்பதற்கு மலையக அரசியல் கட்சிகள் தயாரி;ல்லை என்பதை வெளிப்படுத்துகின்றது.

*   அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் அரசாங்கத்தின் எல்லாத் திட்டங்களையும் ஆதரித்துக்கொண்டிருக்கும் மலையக அரசியல் கட்சிகளால் எப்படித் தோட்ட கம்பனிகளை மாத்திரம் எதிர்ப்பதன் மூலம் ஆக்க ப+ர்வமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்?
சில அரசியல்வாதிகள் கட்சி தாவல்களுக்கு ஏற்ப சந்தர்பவாத அறிக்கை விடுகின்ற தன்மை சிறுபிள்ளை தனமாகவும் கீழ்த்தரமாகவும் இருக்கின்றது. கூட்டு ஒப்பந்தம் சார்ந்த அணியில் இருக்கும் போது ஒருவகையான அறிக்கையையும், அதனை விட்டு வெளியில் வந்தவுடன் அதற்குச் சம்பந்தமே இல்லாதவகையில் முரண்பட்ட அறிக்கையினையும் விடுகின்றனர். உதாரணமாகப் பல வருடங்களாகக் கூட்டு ஒப்பந்தத்திற்றிகு எதிரான கடுமையான விமர்சனங்களை முன் வைத்த ஒரு அரசியல்வாதி தற்போது கட்சிமாறியபின் “கூட்டு ஒப்பந்தம் ஒன்றும் 20:20 கிரிகெட் போட்டி இல்லை” என்று கூட்டு ஒப்பந்த்தத்திற்கு ஆதரவாக அறிக்கை விட்டிருந்தது நகைச்சுவையாக இருந்தது.

கூட்டு ஒப்பந்தத்தின் நடைமுறைப்படுத்தல்
கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுவிட்ட நிலையில் 2013ம் ஆண்டு எப்பிரல் மாதம் வரையிலும் இந்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும். எனவே இக் காலங்களில் குறைந்த பட்ச நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்காக அழுத்தங் களைக் கொடுக்கவேண்டியதும் தொழிற்சங்கங்களின் பொறுப்பாகும். பல தோட்ட நிர்வாகங்கள் கூட்டு ஒப்பந்ததின் உள்ளடக்கங்களை மீறுகின்றனர். எனவே இது குறித்த தெளிவினை ஏற்படுத்துவது அத்தியவசியமாகும்.

இந்த கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள காலங்களில் அந்த ஒப்பந்தம் முழுமையாக அமுல் நடத்தப்படுகின்றதா என்பதினைக் கண்காணிப்பது மிகமுக்கியத் தேவையாகும். மேலும் 2003ம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்திற்கு பின்பு சம்பளம் தவிர்ந்த ஏனை சில உரிமைகள் சலுகைகள் குறித்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இது குறித்துக் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்களிடையே கண்டுகொள்ளாத் தன்மை காணப்படுவது ஏன் என்பது புரியவிலை. எனவே இவ் ஒப்பந்தத்தினையும் புதுப்பி;க்கவேண்டிய தேவையுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் உட்பட இலங்கையில் வாழும் பல்வேறு தனியார் துறை ஊழியர்கள் நியாயமான வேதனத்தினை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அரசாங்கமும் மக்கள் நலன் சார்ந்த கொள்கை மற்றும் கட்டமைப்பு  ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்

புதிய உலக ஒழுங்கில் சுயநிர்ணய உரிமை

விடுதலைப் போராட்டங்களும் சர்வதேசமும்:
புதிய உலக ஒழுங்கில் சுயநிர்ணய உரிமை

-    அஸ்வத்தாமா -

தொடக்கக் குறிப்புகள்
இன்றைய சூழலில் தமிழ்த் தேசியவாத அரசியல் வேறுபட்ட இரு திசைவழிகளிற் பயணிக்கிறது. ஒன்று மகிந்த ராஐபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கத்தைப் போர்;க் குற்றவாளியாக்கிச் சர்வதேச நீதிமன்றில் தண்டனை வாங்கிக் கொடுப்பது. மற்றது இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிமைகளைப் பெற்றுக்கொள்வது. முன்னது புலம்பெயர்ந்த தமிழர்களாலும் பின்னது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளையே நிறைவேற்ற முடியாமல் அல்லற் படுகிறார்கள். இன்று தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை தேசிய இனமொன்றின் மீதான தேசிய இன ஒடுக்கலாகவும் அதற்கெதிராக போராட்டம் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பேசப்படுகிற ஒரு சூழ்நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது. இவை குறுகியகால நோக்கிலும் நீண்டகால நோக்கிலும் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பிற்கே சிக்கல்களை உருவாக்கவல்லவை.

இன்று தமிழ்த் தேசிய இனம் ஒரு அபாயகரமான திருப்புமுனையை எதிர்நோக்கி நிற்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிச் சர்வதேசத்தினது கவனத்தை ஈர்ப்பது என்ற போக்கின் வழியாகத் தமிழ் மக்களின் பிரச்சினையின் அடையாளத்தை மாற்றுகிற அபாயம் சாத்தியமாகி வருகிறது. இது மிக ஆபத்தானது. தமிழ் மக்களின் பிரச்சினையை, வெறுமனே ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகவும் அகதிகள் பிரச்சினையாகவும் எல்லாரிடமும் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கிற ஒரு சமூகத்தின் மீதான கழிவிரக்கமாகவும் ஒடுக்குகிற திசையை நோக்கி நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம்.

கொசோவோ பற்றியும் சர்வதேச நீதிமன்றம் பற்றியும் இந்தியா பற்றியும் அமெரிக்கா பற்றியும் நம்பிக்கைகள் வளர்க்கப் படுகின்றன. ஒரு விடயத்தை நாம் நினைவில் வைத்திருப்பது பொருத்தமானது. கொசோவோ பிரிவினையைச் சர்வதேச சமூகம் ஏற்கிற காரணத்தால் வேறெங்கும் அது அதையொத்த பிரிவினையை ஏற்கப் போவதில்லை. வங்கதேசப் பிரிவினையை இயலுமாக்கிய இந்தியா, பிற இடங்களிலெல்லாம் பிரிவினையை எதிர்த்தே வந்துள்ளது. நேபாளம் இந்திய மேலாதிக்கத்திற்கு முரணாக நடக்கத் தொடங்கியவுடன் நேபாளத்தின் தராய் (Terai) பிரதேசத்தில் பிரிவினையை முடுக்கிவிட்டு தனது நலனை இந்தியா காத்துக்கொண்டது. லிபியாவில், பென்காசியைத் தளமாகக் கொண்டு, நேட்டோ படைகளின் உதவியோடு ஆட்சி மாற்றத்துக்காகத் தாக்குதல் நடாத்துகிற, மாற்றரசாங்கத்தைத் தனது நலனுக்காக அங்கீகரிக்கின்ற சர்வதேச சமூகம்; அதே செயலை வெறெங்கும் இலகுவில் செய்யாது. அவ்வாறு செய்வதாயின் அது முற்றிலும் தனது நலன் சார்ந்த நடவடிக்கையாகவே இருக்க முடியும்.

தலிபான்களை ஒழித்துக்கட்டுவதற்காக என்று ஆப்கானிஸ்தானில் தொடங்கிய போர் வெல்லப்படமுடியாது என்று அறிந்த பின்பு, அமெரிக்கா, தலிபான்களுடன் இரகசியமாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறது. ‘கடைசிப் பயங்காரவாதியையும் தேடிக் கொல்லும் வரை ~பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்| தொடரும்” என 2001 இல் கங்கணங்கட்டிய அமெரிக்க அதிபர் புஷ்ஷின் சொற்கள் எங்கே போயின? இன்று அமெரிக்கா ஆப்கானிலிருந்து வெளியேற முயல்கிறது. தனது நலனைக் காக்க அமெரிக்கா எதுவும் செய்யும் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

இன்று மத்திய கிழக்கில் நடக்கிற மக்கள் போராட்டங்கள் பற்றித் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன? தமிழ்த் தலைமைகள் என்று சொல்லப்படுபவற்றின் நிலைப்பாடு என்ன? நாம் யாருடைய பக்கத்தில் நிற்கிறோம்? நிச்சயமாக, நம் முன்னுள்ள தெரிவு ஒபாமாவுக்கும் ஒஸாமாவிற்கும் இடையிலானதல்ல. அல் க்ஹைடாவோ வேறெந்த மதவாத, இனவாத அமைப்போ ஏகாதிபத்திய எதிர்ப்பை மையமாகக் கொண்டு போராடவில்லை. எனவே தான் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் யாவும் அவற்றின் பரந்துபட்ட ஒற்றுமைக்கான பொதுக் காரணிகளைத் தேட வேண்டும். அத் தேடலுக்கான உடனடியான களங்களில் உள்ள பலஸ்தீன, லிபிய, சிரிய மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது முக்கியமானது. ஆயுதமேந்திய எதிரியை ஆயுதமேந்தாமற் போரிட இயலாது. எந்த ஆக்கிரமிப்பிற்கும் எதிராகவும் சாத்வீகம் வென்றதில்லை. ஆனாலும் உரிமைப் போராட்டம் என்பது ஆயுதங்களால் மட்டும் வெல்லப் படுவதல்ல. ஆயுதங்களை விட அரசியல் முக்கியமானதும் அடிப்படையானதும் ஆகும். இதை உணராத எந்தவொரு விடுதலைப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. இன்றைய நிலையில் நமக்குத் தேவையானது வெகுசன மக்கள் இயக்கங்களை உருவாக்குவதே. ஏனெனில் ஆயதப் போராட்டங்களை விட முக்கியமான சமூகப் பணி ஒன்றை அவை ஆற்றுகின்றன. அவை மக்களை ஒன்று திரட்டுகின்றன. மக்கள் கெஞ்சி இரந்து மன்றாடக் கூடாது. நின்று நிமிர்ந்து தமக்கு உரியதைக் கேட்டுப் போராட வேண்டும். அதற்கு மக்களை ஒருங்கிணைக்கும் பணி அவசியமாகிறது. இதற்கு நேபாளம் நல்லதொரு உதாரணமாக விளங்குகிறது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அடிப்படையிலேயே சிக்கல்களை உருவாக்கிக் கொண்டதன் பலாபலன்களே நாம் இன்று காணும் தமிழ்த் தேசியவாத அரசியல். விடுதலைப் போராட்டங்கள் அறம் பற்றியன. அறஞ்சார்ந்த பார்வையால் வழிநடத்தப்படாத விடுதலைப் போராட்டங்கள் தோல்வியை சந்திப்பது தவிர்க்க முடியாதது. எல்லாவற்றிலும் மேலாகத் தமிழர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற உண்மை இன்னமும் நமக்கு உறைக்கவில்லை. இன்னமும் ஆண்ட பரம்பரைக் கனவுக்குள் திரும்பத் திரும்ப அமிழ்த்தப்படுகிறோம். நம்மிற் சிலருக்கு அந்தக் கனவுக்கும் நிச வாழ்வுக்கும் வேறுபாடு தெரியாது. அதன் விளைவாக, உரிமைக்கான போராட்டம் விடுதலைக்கான போராட்டமாக வளர்ந்த பின்பு, இப்போது இருப்பிற்கே போராட வேண்டிய நிலையில் தமிழ்ச் சமூகம் உள்ளது. தமிழ்ச் சமூகம் தனது விடுதலைக்கான பொறுப்பை முற்றிலும் தன் வயமாக்காதவரை தவறுகள் தவிர்க்க இயலாதவை. இந்தப் பின்னணியில் விடுதலைப் போராட்டங்களில் சர்வதேசத்தின் வகிபாகம் பற்றியும் புதிய உலக ஒழுங்கின் நிகழ்நிலைகளையும் முன்னிறுத்தும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட சமூகங்களும் அந்நியத் தலையீடும்
ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் என்ற வகையில் தமிழ்ச் சமூகத்தின் நிலை என்ன? தன்னையொத்த நிலையில் உள்ள உலகின் பிற மக்கள் யார், தன்னை யாருடன் அடையாளப்படுத்துவது என்பன போன்ற விடயங்களிற் சரியான முடிவுகளை வந்தடைய நமக்கு உலக நிலைமைகள் பற்றிய உண்மைகள் தெரிய வேண்டும@ நமது வரலாறு பற்றிய உண்மைகள் தெரிய வேண்டும். அவை ஏன் நமக்குச் சொல்லப்படுவதில்லை என்பதை நாம் விசாரிக்க வேண்டும். ஊடகங்கள் எவற்றைச் சொல்லுகின்றன என்பதை விட எவற்றைச் சொல்லாமல் தவிர்க்கின்றன என்பது முக்கியமானது. உலகில் நீதியையும் நியாயத்தையும் மனித உரிமையையும் மதிக்கிற எல்லாரது நட்பும் தமிழ் மக்களுக்கு தேவையானதும் பயனுள்ளதும் என்பதில் மறுப்பில்லை. ஆனால், அந்த நட்பு ஈவோருக்கும் இரப்போருக்கும் இடையிலான உறவாக இருக்கக்கூடாது. அது சமத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஒடுக்குமுறைக்குத் தொடர்பான எப் பிரச்சினையும் கருணையினால் தீர்க்கப்பட்டதில்லை. தமிழின விடுதலைக் குத்தகைக்காரர்கள் எவராலும் தமிழ் மக்களின் விடுதலையைப் பெற்றுத்தர இயலாது என்கிற உண்மையை நாம் மறந்துவிடலாகாது.

நாம் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் என்பதை நாம் உணராதவரை, எம்மாற் பயனுள்ள திசையிற் பயணிக்க இயலாது. இன்று வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மிக அடிப்படையான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். அண்மைய உலக உணவுத்திட்ட அறிக்கை, இலங்கையிலே உணவுப் பாதுகாப்பு மிகவும் குறைந்ததும் போஷாக்கில்லாத உணவை அதிகளவில் உட்கொள்பவர்களைக் கொண்டதுமான மாவட்டமாக கிளிநொச்சியை இனங் கண்டிருக்கிறது. அங்கு மோசமான உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது. வடக்கில் 166,000 குடும்பங்களுக்கு நிரந்தர இருப்பிடங்கள் தேவைப்படுகின்றன. வேலையில்லாப் பிரச்சனையும் குடும்பத்தலைவர்களாகப் பெண்களைக் கொண்ட குடும்பங்கள் அதிகளவில் இருப்பதும் பாரிய பொருளாதார, சமூகப் பிரச்சனைகளை உருவாக்குகிறது. மக்கள் சார்ந்த இப் பிரச்சனை தனிநாட்டையோ போர்க்குற்றங்களையோ பற்றியதல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்றாட வாழ்க்கையே போராட்டமாகத்தான் இருக்கிறது.

இன்று இலங்கையில் எயிட்ஸ் விரைவாகப் பரவும் மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் இருக்கிறது. வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் பலரைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறது. அவர்களைச் சுரண்டித் தங்களது தேவைகளைத் தீர்த்துக் கொள்பவர்களாக இருப்பவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழர்களே என்று ஒரு அறிக்கை கூறுகிறது. அவ்வறிக்கையின்படி யாழ்ப்பாணத்தில் இது ஒரு வரன்முறையான தொழிலாக மாற்றமடைந்ததற்கும் இனியும் அது தொழிலாக தொடரப் போவதற்குமான முக்கியமான இரண்டு காரணிகளாக வறுமையையும் வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களையும் இனம் காணுகிறது.

இவையெல்லாம் தமிழ்ச் சமூகம் இன்று எதிர்நோக்கும் பாரிய சவால்கள். ஒரு பண்பட்ட சமூகமாக எம்மைத் தக்கவைப்பதே சிக்கல்கள் மிகுந்ததாக இருக்கும் நிலையில் நாம் ஆண்ட பரம்பரைக் கனவுகளிலும் வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் பொருளாதார பலம் பற்றிய நம்பிக்கைகளிலும் இருக்கிறோம். இவற்றில் எதுவுமே மிகக் கொடிய யுத்தத்திலிருந்து மக்களைக் காப்பாற்றவில்லை, யுத்தத்தின் இறுதிக் கட்டத்திற் பொதுமக்களின் படுகொலையைத் தடுக்கவில்லை, மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் ஒரு வேளை உணவுக்காக கையேந்த நேருவதைத் தடுக்கவில்லை. இவை எல்லாம், நாம் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் என்பதை நாம் உணரத் தவறியதன் விளைவுகளே.

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் என்பது தனியே ஆயுதப் போராட்டம் என்ற ஒற்றைப் பரிமாணக் கண்ணோட்டத்தையே போராளி அமைப்புக்கள் கொண்டிருந்தன. அதன் விளைவுகளை இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லோரும் அனுபவிக்கிறார்கள். இந்த இடத்தில் தான் பிற போராட்டங்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்வது பயனுடையதாகிறது. நேபாள மாஓவாதிகள் வெறுமனே ஆயுதப் போராட்டம் மட்டும் நடத்தவில்லை. அவர்கள் காணிச் சீர்திருத்தம், பெண்ணுரிமை, சாதிய ஒழிப்பு, இன சமத்துவம் போன்ற பல வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட அதே வேளை, மக்களின் கூட்டு முற்சியால் ஒரு நெடுஞ்சாலை உட்பட்ட நிர்மாண வேலைகளையும் முன்னெடுத்துள்ளனர். இவை ஒரு விடுதலைப் போராட்டம் கொண்டிருக்க வேண்டிய பண்புகள். சீன, வியற்நாமிய, பிலிப்பினிய கம்யூனிஸ்ற்றுக்கள் உட்பட்ட மாக்ஸிய லெனினியர்கள் யாவரும் எல்லாக் காலத்திலும் அமைதியான முறையில் நியாயமான தீர்வுகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற ஆயத்தமாகவே இருந்துள்ளனர். வீணான உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதில் மிகுந்த அக்கறையுடன் இருந்து வந்துள்ளனர். போராட்டம் என்பதை அவர்கள் பல வேறு தளங்களிலும் மேற்கொள்ள ஆயத்தமாயிருந்துள்ளனர். அமைதியாக வென்றெடுப்பதை எதிரி குழப்புவான் என்று அறிந்து, எச்சரிக்கையுடன் செயற்படுவதும் குழப்புகிற சூழ்நிலையில் தேவைக்கேற்ப ஆயுதம் ஏந்தியோ ஏந்தாமலோ போரிடுவதுமே மாக்ஸிய லெனினிய போராட்ட அணுகுமுறை.

நேபாள மக்கள் போராட்டம் நமக்குச் சொல்லும் பாடங்கள் பல. வெறுமனே ராணுவப் பதிலடிகள் மூலம் தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாக்க இயலாது. இது இன்று வரையிலான போராட்ட அனுபவம். மக்களின் பாதுகாப்பையும் நலன்களையும் முதன்மைப் படுத்துகிற விதமாகக் காரியங்கள் மேற்கொள்ளப்பட்ட காலங்கள் இருந்துள்ளன. ஆனாலும் அவை மக்களை முதன்மைப் படுத்துகிற முறையில் மேற்கொள்ளப் பட்டதாகக் கூற இயலாது. தமிழ்; மக்களுக்குத் துரோகமாக நடக்கிறவர்கள் எனக் கருதப்படும் எல்லாரையும் அழித்தாலும் விடுதலையை வெல்ல இயலாது. மனிதர்களது தவறுகளை அவர்களது சூழ்நிலைகளில் வைத்துப் பார்ப்பதும் அவர்களை விடுதலைப் போராட்டத்தின் தரப்பிற்கு வென்றெடுப்பதும் ஒரு விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான தேவை. இவ் விடயத்தில், தமிழ் மக்களின் நலனும் பாதுகாப்பும் பற்றி அக்கறையுள்ள அனைவருமே கவனங் காட்டவேண்டும். தவறின், தமிழ் மக்களே அதனால் மிக அதிகம் இழப்போராக இருப்பர். நாம் எம் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களின் போராட்டங்களில் இருந்து கற்க வேண்டும். ஆனால், தமிழ் மக்களுக்கு ஆண்டாண்டு காலமாயக்; காட்டப்பட்டுவந்துள்ள உதாரணங்கள் மோசமானவை. 1960களில் நமக்கு முன்னுதாரணமான நாடாக இஸ்ரேல் காட்டப்பட்டது. இஸ்ரேல் இயற்றி வந்த கொடுமைகள் பற்றியோ இஸ்ரேலின் உருவாக்கம் எவ்வளவு அநீதியானது என்றோ நமக்குச் சொல்லப்பட்டதில்லை. அத்துடன், நமது நிலைமை, இஸ்ரேலினால் மிகக்கொடுமையாக ஒடுக்கப்படுகிற பலஸ்தீனர்களுக்கும் அராபியர்களுக்கும் ஒப்பானது என்பதும் நமக்குச் சொல்லப்படவில்லை. அதற்கும் அப்பால், இஸ்ரேலின் முன்னுதாரணம் நம்மிடையேயுள்ள ஆண்டபரம்பரைக் கனவுகளின் வெளிப்பாடே. அவ்வாறான விடுதலையை ஒருவேளை தமிழ் சமூகம் வென்றிருக்குமாயின், இஸ்ரேல் போல ஏனைய இனங்களையும் சிறுபான்மையினரையும் கொடூரமாக ஒடுக்கும் சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்திருக்கக் கூடும். அது நிகழவில்லை.

இஸ்ரேலுக்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு முன்னுதாரணமாக வங்க தேசத்தின் (பங்ளாதேஷ்) பிரிவினை காட்டப்பட்டது. பங்ளாதேஷ் விடுதலையை வென்று வழங்கிய இந்தியா தமிழீழ விடுதலையையும் வென்று தரும் என்ற கனவு ஊட்டி வளர்க்கப்பட்டது. அங்கு இந்தியப் படைகளும் அவர்களது எடுபிடிகளும் பங்ளாதேஷில் மக்கள் இயக்கங்களைக் கட்டியெழுப்பியிருந்த கம்யூனிஸ்ட்டுகளைத் துடைத்தெறிந்தது பற்றி யாரும் கவலைப் படவில்லை. இந்தியாவின் எடுபிடியான முஜிபுர் ரஹ்மான் மக்களாதரவை முற்றாக இழந்து படுகொலைக்கு ஆளாகும் வரை, நமக்கு நல்லதொரு உதாரணமாகக் காட்டப்பபட்டு வந்தார். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இப்போதுங் கூடக் கணிசமான அளவுக்கு இந்தியாவின் எடுபிடிகளின் கைகளிலேயே இருக்கிறது. நாம் நமது அனுபங்களிலிருந்து கற்றுக்கொண்டது போதாது போலத் தெரிகிறது.

இலங்கையில் சனநாயகமும் மனித உரிமைகளும் பேணப்பட வேண்டும் என்று அமெரிக்கா அடிக்கடி சொல்வதைத் தமிழர்கட்கு ஆதரவான நிலைப்பாடாக எவரும்; கருதுவது அபத்தமானது. ஆயினும் தமிழ்ப் புத்திஜீவிகளும் தமிழ்ப் பத்திரிகைகளும் அவ்வாறான முடிவுகட்குத் தான் வருகிறார்கள். இலங்கைக்குக் கேடானதும் இலங்கை அரசுக்கு எதிரானதும் தமிழருக்கு நல்லதாக அமைய அவசியமில்லை. அதிலும் முக்கியமாகத், தமிழரைக் காரணங்காட்டிக் குறுக்கிடுகிற எவரும் தமிழரின் நன்மை கருதிக் குறுக்கிடவில்லை என்பதை நாம் நன்கு நினைவிலிருத்த வேண்டும்.
இன்று இலங்கையில் அந்நியக் குறுக்கீடு நிகழுமாயின் அது ஆட்சி மாற்றத்துக்குரியதாக இருக்குமே தவிரத் தமிழர்களுக்கு உரிமைகளை வென்று தருவதற்கானதாக இராது. அவ்வாறான அந்நியக் குறுக்கீடு இன்னும் கொடூரமான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடக்கூடிய ஆட்சியொன்றிற்கே வழிவகுக்கும். அதிலும் அதிகம் பாதிக்கப் படுவோர் தமிழராகவே இருப்பர். அந்நியக் குறுக்கீடு எதுவும் மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதில் ஐயம் வேண்டாம்.

சுயநிர்ணய உரிமை
இன்று உலகத்தில் எற்பட்டிருக்கின்ற தேசியப் பிரச்சனைகளை நோக்கும் போது தேசியவாதத்தின் வளர்ச்சியை முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் இணைத்து பார்க்கவேண்டும். ஒரு காலத்தில் முதலாளித்துவம் தேசியவாதத்தை ஆதரித்தது. அதே முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்த பின்பு, தேசிய இன ஒடுக்கலை மேற்கொண்டு இன விடுதலையை எதிர்த்தது. தேசிய இனப் பிரச்சினையில் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு கொள்கையிருக்கின்றது: தனது வசதிக்கேற்ப சில இனவிடுதலைப் போராட்டங்களை அது ஆதரிக்கும் சில இனவிடுதலைப் போராட்டங்களை அது எதிர்க்கும். இன்று ஆதரித்ததை நாளை எதிர்க்கவுங் கூடும். அவ்வாறு தான் அது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைத் தனது நலனுக்கேற்றவாறு பயன்படுத்தி வந்துள்ளது. சுயநிர்ணய உரிமை, அவ்வாறு மாறுபடக்கூடிய வியாக்கியானங்களை உடையதாக இருக்க முடியாது. இந்த இடத்தில், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைத் தங்களுக்கு வசதிக்கு ஏற்றுவாறு திரிப்பவர்களின் நோக்கங்கள் முக்கியமாகின்றன.

ஒரு உரிமையைக் கொண்டவர், அதை ஏன் எப்போது பிரயோகிக்க வேண்டும் என்பதை ஆராயாமல், ஒரு உரிமை இருப்பதால் அது பிரயோகிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று சிலர் ஏன் சொல்கிறார்கள்? அந்த உரிமை பிரயோகிக்கப்படாமை அந்த உரிமையின் இழப்பல்ல. பிரிந்து போகும் உரிமை கோரிப் போராடுவோர் பிரிவினைக்காகப் போராடுவோரினின்று தெளிவாகவே வேறுபடுகிறார்கள். முன்னையோர் இணைந்து வாழும் வாய்ப்பைக் கருத்திற் கொண்டு போராடுகிறார்கள்: பின்னையோர் எவரிடமும் பிரிந்துபோகும் உரிமையைக் கேட்காமற் பிரிவினைக்காகவே போராடுகிறார்கள். எனவே இவ்வாறான அடிப்படை வித்தியாசங்களை எளிதாக அலட்சியம் செய்துவிட்டுப் புனையப்படும் “சுயநிர்ணயம் = பிரிவினை” என்ற சூத்திரம் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். அவ்வாறு புனைபவர்கள் தெரிந்து திட்டமிட்டே அதைத் செய்கிறார்கள். இனங்களிடையே நல்லுறவு ஏற்படுபது அவர்களது நலன்களுக்குக் தீங்கானது. எனவே சுயநிர்ணய உரிமையைப் பிரிந்து போவற்கான உரிமை மட்டுமே என வியாக்கியானம் செய்வதன் மூலம் சகல இனங்களுக்குமான சுயநிர்ணய உரிமைகள் மறுக்கப்பட அவர்கள் வழிசெய்கிறார்கள்.

பிரிந்துபோகும் உரிமையின் அங்கீகாரம் பிரிவினையை ஊக்குவிக்கும் நோக்கையுடையதல்ல. மாறாக அது ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சுயவிருப்பின் பேரில் ஒன்றாக வாழும் வாய்ப்பைப் பலப்படுத்தும் நோக்கையுடையது. அதன் காரணமாகவே சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினையே என்று கூறுவோர் சுய நிர்ணய உரிமை என்பதன் கருத்தைத் திரிக்கிறார்கள். அதாவது ஒன்றைச் செய்யும் உரிமையை அதைச் செய்யும் நிர்ப்பந்தமாக மாற்றுகிறார்கள்.

தேசிய இனங்களின் பிரச்சினை, முக்கியமாகத் தேசிய அரசாக அமையும் வாய்ப்பில்லாத தேசிய இனங்களின் பிரச்சனை, இன்று மேலும் கவனமான பரிசீலனையை வேண்டி நிற்கிறது. சுய நிர்ணயம் என்பதன் பொருள் ஒரு தேசம் பிரிந்துபோகும் உரிமையை எந்த நிலையிலும் மறுக்காத விதமாக மேலும் விரிவுபடுத்தபட வேண்டிய தேவையை நாம் எதிர்நோக்குகிறோம். தேசிய இனம் என்ற பதத்தின் பொருளை மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. தேசிய இனங்களாக அடையாளங்காண முடியாத ஒடுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகளது உரிமைகள் தொடர்பாகவும் தெளிவான கருத்துக்கள் அவசியமாகின்றன. தேச அரசுகள் முக்கியத்துவமிழந்து வரும் புதிய உலக ஒழுங்கில் புதிய சவால்களை நாம் எதிர்நோக்குகிறோம்.

ஒரு தேசிய இனம் ஒரு தேசமாக அல்லது ஒரு தேசிய அரசாக அமைவதற்குச் சில நடைமுறைச் சாத்தியமான தேவைகள் உள்ளன. அதற்குரிய தொடர்ச்சியான ஒரு பிரதேசம் முக்கியமான ஒரு தேவை. அவ்வாறு எப்போதுமே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததில்லை.  தேசிய இனப் பிரச்சனை தொடர்பான கொள்கைகள் ஆதிவாதிகள், நாடோடிகள் போன்ற சமுதாயப் பிரிவினரைப் போதிய கணிப்பிலெடுக்கத் தவறியதன் காரணமாக இம் மக்களது உரிமைகள் உலகெங்கும் நாளாந்தம் பறிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் வேடர் சமுதாயத்தின் பிரச்சினையோ நாடோடிகளின் நிலைமையோ தேசிய இனப் பிரச்சினையின் ஒரு பகுதியாகவேனும் இதுவரை கருதப்படாமை கவனிக்கத்தக்கது.

இன்னொரு அம்சம் மிகவும் அடிப்படையானது. ஒரு மக்கள் பிரிவு தேசிய இனமாக அடையாளங் காணப்பட்டால் அதற்குச் சுய நிர்ணய உரிமை உண்டு. சுய நிர்ணய உரிமை என்றாற் பிரிந்து போகும் உரிமை. பிரிந்து போகும் உரிமையைப் பிரயோகிக்கும் வசதி இல்லாத ஒரு மக்கள் பிரிவுக்குச் சுய நிர்ணய உரிமையை அதன் முழுமையான அர்த்தத்தில் அனுபவிக்க முடியாது என்பது உண்மை. அதனால் அவர்கட்குத் தம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையே இல்லை என்றாகிவிடுமா? அக் காரணத்தால் அவர்கள் ஒரு தேசிய இனமாக இல்லாது போய்விடுவார்களா? ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம் ஒடுக்கப்பட்ட ஏனைய தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமையை மறுக்கிற போது, தனது சுயநிர்ணய உரிமையை ஏனைய இனங்கள் ஏற்க மறுக்கிற சூழலை அது உருவாக்குகிறது. இது தீங்கானது. இவை விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கான பாதையில் பாரிய தடைக்கல்லாக அமையக்கூடும்.

நிறைவாக
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்று தவிர்க்க இயலாத ஒரு வரலாற்றுத் தேவை. ஆனால் அது ஆயுதம் தாங்கிய போர் என்ற ஒற்றைப் பரிமாணத்திலிருந்து விடுபட வேண்டும். அதைப் பரந்துபட்ட மக்கள் போராட்டங்களாகவும்; வெகுசன அரசியல் இயக்கமாகவும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் தேடப்பட வேண்டும். அதன் மூலமே தமிழ் மக்களிடையே அதிகபட்ச போராட்ட ஒற்றுமையையும் பங்குபற்றலையும் பெற இயலும். தோழர்களும், சமூக அக்கறையும் துணிவுமுள்ள பத்திரிகையாளர்களும் தொழிற் சங்கவாதிகளும் துன்புறுத்துப்படுவது பொது எதிரியின் வலிமையின் அடையாளமல்ல. அவை எதிரியின் இயலாமையின் வெளிப்பாடுகள். அதைக் கண்டு நாட்டின் சனநாயக முற்போக்கு சக்திகள் தயங்கி நின்றால், நாடு ஃபாஸிஸத்தை நோக்கித் தள்ளப்படுவது தவிர்க்க இயலாதது. இந்த நாட்டில் உள்ள மக்களாலேயே நாட்டின் தேசிய இனப் பிரச்சினையையும் மனித உரிமைப் பிரச்சினைகளையும் சனநாயகப் பிரச்சனையையும் தீர்க்க இயலும். வெளியிலிருந்து வரக்கூடிய எந்தக் குறுக்கீடும் பிரச்சினைகளை மோசமாக்குவதுடன் இருக்கிற ஒடுக்குமுறையை விட மோசமான ஒடுக்குமுறைக்கே இட்டுச்செல்லும். இது சோதனை மிகுந்த காலமாகத் தோன்றலாம். ஆனால் இதுவே எதிர்காலத்தின் வெற்றிகட்கான உறுதியான அத்திவாரங்களை இடுவதற்கான காலமுமாகும்.

சுயாட்சி வென்றெடுக்கப்பட வேண்டும்

ஐக்கியப்பட்ட இலங்கைக்குள்
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்
சுயாட்சி வென்றெடுக்கப்பட வேண்டும்

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது வடபிராந்திய மாநாட்டில் பொதுச் செயலாளார் சி.கா. செந்திவேல் ஆற்றிய சிறப்புரையும் மாநாட்டுத் தீர்மனங்களும்

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் ஜந்தாவது வட பிராந்திய மாநாடு கடந்த 26.02.2011 அன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. ஜந்து பேர் கொண்ட தலைமைக் குழுவின் தலைமையில் நடைபெற்ற முழு நாள் மாநாட்டிற் கட்சியின் பொதுச் செயலாளார் தோழர் சி.கா. செந்திவேல் கலந்துகொண்டு ஆற்றிய சிறப்புரை கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளது:
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இருபது மாதங்களுக்கு மேலாகியும் அக் கொடிய யுத்தத்திற்குக் காரணமாக நீடித்து வந்த தேசிய இனப் பிரச்சினைக்கு மகிந்த சிந்தனை அரசாங்கத்தினால் தீர்வு எதனையும் முன்வைக்க இயலவில்லை. அதற்கான அடிப்படைக் காரணம் பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்க நிலைப்பாடே யாகும். அதன் மூலம் இன முரண்பாடும் இன ஒடுக்குமுறையும் நீடித்துச் செல்கின்றன. அதனால் இலங்கை அரசியலில் தேசிய இனப் பிரச்சினை என்பது இன்றும் பிரதான இடத்தில் இருந்து வருகின்ற அரசியல் யதார்த்தத்தை ஜனநாயக மறுப்பு, சலுகைகள், அபி விருத்திகள் போன்றவற்றால் மூடி மறைத்து விட முடியாது. அதனாலேயே ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சி மூலமாக நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி வற்புறுத்தி வருகின்றது.

யுத்தத்தின் கொடூரத்தாலும் போரட்டத்தின் தவறான கொள்கை வழிமுறைகளாலும் வரலாறு காணாத பேரவலங்களையும் பேரழிவு களையுமே தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டனர். அதற்கான முழுப் பொறுப்பையும் தெற்கின் பேரினவாத முதலானித்துவ ஆளும் வர்க்கத்தினரும் வடக்கின் தமிழ்த் தேசியவாதம் பேசிவந்த குறுந் தேசியவாதிகளும் ஏற்றுக் கொள்ள வோண்டும். ஒரு நாட்டிற்கான தேசியத்தையாயினும் அல்லது ஒரு இனத்திற்கான தேசியத்தை யாயினும் இரண்டு தளங்களில் நின்று முன்னெடுக்க முடியும். ஓன்று முற்போக்கான தேசியம் இரண்டாவது பிற்போக்கான தேசியம். சுதந்திரத்திற்கு முன்பிருந்தே பேசப்பட்டுவந்த நாட்டுத் தேசியம் பிற்போக்குத் தளத்தில் பேரினவாதமாகவே வளர்த்து முன்னெடுக்கப் பட்டது. அவ்வாறே தமிழ் இனத் தேசியம் என்பதும் பிற்போக்குத் தளத்தில் நின்று குறுந் தேசியவாதமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள் ளது. இவற்றால் சிங்கள ஆளும் வர்க்கச் சக்திகளும் தமிழ் மேட்டுக் குடி ஆதிக்க அரசியற் சக்திகளுமே பயன்பெற்று வந்தன. ஆனால் அவலங்களையும் இழப்புக்களையும் சாதாரண உழைக்கும் தமிழ் மக்களே அனுபவிக்க வேண்டியவர்களாக ஆனார்கள்.

ஆதலால் இனிமேலும் தமிழ்த் தேசியம் என்பதனை வெறும் உணர்ச்சிக்குரியதாகக் கொண்டு வாக்குகள் பெறுவதற்காகப் பழைய செக்கிழுத்த பாதையில் பிற்போக்கான தமிழ்க் குறுந் தேசியவாதமாக முன்னெடுத்துச் செல்லும் இரத்தக் கறை படிந்த கொள்கைகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும். தமிழ்த் தேசிய ஆதிக்க அரசியல் போக்கை இளந் தலைமுறையினர் இனங்கண்டு முற்போக் கான தமிழ்த் தேசியத்தை கைப்பிடிக்க முன்வர வேண்டும். தமிழ்த் தலைமைகள் அந்நிய ஏகாதிபத்திய சக்கிகளுக்கும் பிராந்திய மேலாதிக்க சக்திகளுக்கும் அடிபணிந்து சென்றதன் விளைவை இறுதி யுத்த காலகட்டத்தில் தமிழ் மக்கள் இரத்தம் பெருகி உயிழ்கள் இழந்த போது அனுபவித்துக் கொண்டனர். இத்தனைக்குப் பின்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவையும் அமெரிக்காவையும் அடிமை விசுவாசத்துடன் அரசியல் தீர்வுக்காகக் காத்திருப்பது தமிழ் மக்களை மீண்டும் தமது பிற்போக்கான தமிழ்க் குறுந் தேசியவாதப் பாதையில் ஏமாற்றி அழைத்துச் செல்வதற்கேயாகும்.

தமிழ்த் தேசியம் என்பதனை உரத்துக் கூவிக் கொண்டு கடந்த நூற்றாண்டில் தமிழ்த் தலைமைகள் யாவும் முன்னெடுத்த கொள்கை களும் போராட்ட வழிமுறைகளும் முற்று முழுதான தோல்விகளையே கண்டு வந்துள்ளன. இன்று அவற்றை வேறு வேறு பெயர்களில் முன்னெடுக்கவே அத் தலைமைகள் முன்னிற்கின்றன. வாக்குகள் பெறுவதற்காகத் தமிழ்த் தேசியவாத அரசியலை மீண்டும் தூசு தட்டி மக்கள் முன்வைக்கின்றனர். இவர்களில் சிலர் முற்றிலும் அடிபணிந்த அரசியலை ‘விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை’ என்ற தோரணையில் முன்னெடுக்கின்றனர். மற்றும் சிலர், ‘நாடுகடந்த தமிழீழ அரசு’ என்பதனை நம்பி ‘அவலை நினைத்து உரலை இடிப்பது’ போன்று அரசியல் செய்ய முன்நிற்கின்றனர். ஆனால், தமிழ் மக்கள் பட்டது போதும் என்ற நிலையில் அரசியல் மௌனத்தில் உறைந்து காணப்படுகின்றனர். இதற்கு ஜனநாயக மறுப்பும் இயல்பு வாழ்வுச் சிதைப்பும் அரசியல் தீர்வு முன்வைக்கப்படாமையும் அடக்கு முறை, அச்சம், பீதி என்பன மட்டும் காரணங்களல்ல. தமிழ்த் தேசியவாதம் பேசி தமிழீழத்தை அடைய நின்ற அனைத்துத் தலைமைகளின் மீதான அரசியல் விரக்தியும் வெறுப்பும் காரணமாகும்.

இந் நிலையில் தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள ஒரே அரசியல் மார்க்கம் வெகுஜனப் போராட்டப் பாதையாக மட்டுமே எஞ்சிநிற்கிறது. நமக்கான கொள்கை நிகழ்ச்சி நிரலை நாமே தயாரிப்போம். நாமே அணி திரள்வோம். எமக்கான தலைமையை நாமே உருவாக்குவோம். அத்தகைய கொள்கையானது கடந்தகாலப் பட்டறிவில் இருந்து முற்றிலும் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் தமிழ் மக்களின் நலன்களுக்கானதாக இருப்பதை உறுதி செய்து கொள்வோம். தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சாதிய ஏற்றத் தாழ்வுகள், சமூக நீதி மறுப்புக்கள் பெண்கள் மீதான ஒடுக்குதல்கள், மற்றும் பாரபட்சங்களை அகற்றக் கூடிய ஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் பரந்துபட்ட மக்களை ஜக்கியப் படுத்துவோம். அந்திய சக்திகள் மீதான அடிமை விசுவாசத்தைத் தகர்த்தெறிவோம். குறுகிய இன வாதத்தைக் கைவிட்டுச் சிங்கள உழைக்கும் வர்க்க மக்களோடு இணைந்து நிற்போம். ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமை கள் பற்றி சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களையும் எமது வெகுஜனப் போராட்டப் பாதையில் ஜக்கியமுறச் செய்வோம். இதுவே தமிழ் மக்களின் முன்னால் உள்ள சரியான அரசியல் தெரிவாக இருக்க முடியும்.

இதுவரை தமிழ் மக்கள் மத்தியில் மூன்று கட்டங்களாகளில் முன்னெடுக்கப் பட்டு வந்த கொள்ளைகளும் வழிமுறைகளும்  தோல்வியடைந்து அழிவுகள் எஞ்சியுள்ள சூழலில் மேற் கூறியவற்றின் அடிப்படையில் நான்காவது போராட்ட முனை திறக்கப்படுவது மட்டுமே சரியானதாக உறுதியானதாக தூரநோக்குடையதாக அமைய முடியும். தமிழ் மக்கள் மத்தியில் இத்தகைய புதிய மாற்று அரசியல் கொள்கையும் நடைமுறை வழி முறைகளும் சிந்திக்கப்படாது விட்டால் விடுதலைக்கான மார்க்கம் ஏதுவும் திறக்கப்பட முடியாததாகும்.

எனவே எமது கட்சி தனது சொந்தக் கொள்கை நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் அதே வேளை முற்போக்கான தமிழ்த் தேசியம் என்பது குறுந்தமிழ்த் தேசியவாதத்தை நிராகரித்து முகிழ்த்தெழு மானால் அவற்றுடன் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயற்படவும் தயாராக இருக்கிறது என்பதையும் இப் பிராந்திய மாநாட்டின் ஊடாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

***

இப் பிராந்திய மாநாட்டில் வடமாகாணத்தின் ஜந்து மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். மாநாட்டிற்கான அறிக்கையை வட பிராந்தியச் செயலாளார் தோழர் கா. கதிர்காமநாதன் முன் வைத்தார். அறிக்கை மீதான விவாதத்தில் மாநாட்டுப் பிரதிநிகள் கலந்து கொண்டு விரிவான கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன் மாநாடு பதினான்கு தீர்மானங்களை நிறைவோற்றியது. தோழர்கள் க. தணிகாசலம், சோ. தேவராஜா ஆகியோர் ஆரம்ப உரை சிறப்புரை ஆற்றினர். மறைந்த கட்சி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பட்;டதுடன் மூத்த தோழர்கள் மூவர் மாநாட்டில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

***
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் வட பிராந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1)    யுத்தம் முடிவடைந்து இரண்டாவது ஆண்டை நெருங்கியபோதும் அந்த அவலங்கள் தாக்கங்களிலிருந்து மக்கள் முற்றாக மீளவில்லை. இந் நிலையில் இன இனமுரண்பாடும் ஒடுக்கு முறையும்; நீடிக்கின்றன. எனவே தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காலத்தை நீட்டாது முன்வைப்பதை வற்புறுத்து கிறோம். அத்தகைய தீர்வு சுயநிர்ணய உரிமை அடிப்படையில், ஜக்கியப்பட்ட இலங்கையில் பூரண சுயாட்சி உடையதாக அமைய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

2)    மீள் குடியேற்றம், புனரமைப்பு புனர்வாழ்வு என்பன வெறும் பெயரளவில் அன்றி மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் எவ்வித தலையீடும் அச்சுறுத்தலும் நெருக்கடிகளும் இன்றி சுதந்திரமாகவும், இயல்பாகவும் வாழ்வதற்கு ஏற்ப இயல்புச் சூழலை விரைவாக ஏற்படுத்த  வேண்டும்.

3)    வலி வடக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் இருந்து வரும் உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீள் குடியேற்றம் துரிதப் படுத்தப்பட வேண்டும்.

4)    அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்படுவதுடன் பயங்கர வாதத் தடைச் சட்டம் அகற்றப்பட வேண்டும்.

5)    அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதுடன் காணாமற்போனோர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டும்.

6)    இனம் தெரியாதோர் என்னும் பெயரில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொலைகளும் கொள்ளைகளும் ஆட்கடத்தல்களும் நிறுத்தப் படுவதற்கு, உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதுடன் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

7)    ஜனநாயகம், இயல்பு வாழ்வு என்பன மீண்டும் தோற்றுவிக்கப்பட வேண்டும். முழுமையான சிவில் நிர்வாகம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

8)    அடிப்படை ஜனநாயக-, மனித உரிமைகளும் தொழிற்சங்க உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஊடக, கருத்துச் சுதந்திரங்கள்; நிலை நிறுத்தப்பட வேண்டும்.

9)    பொருட்களின் விலையுயர்வு தடுத்து நிறுத்தப்படுவதுடன் வாழ்க்கைச் செலவின் உயர்வு கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஏற்பச் சம்பள உயர்வு சகல தரப்பினருக்கும் வழங்கப் பட வேண்டும்.

10)    விவாசயிகளும் அன்றாடத் தொழிலளர்களும் மீனவர்களும் தத்தமது தொழில்களைச் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் முன்னெடுப்பதற்கு ஏற்ற இயல்புச் சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

11)    ஏகாதிபத்திய உலகமய திறந்த பொருளாதாரத்தின் விளை பயனான நுகர்வுக் காலாசாரத்தின் நச்சுத்தனமான பாதிப்புக்கட்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்து அணிதிரட்ட வேண்டும்.

12)    இலங்கையின் இறைமைக்கும், இனங்களின் ஜக்கியத்துக்கும் வேட்டு வைத்துவரும் அமெரிக்க ஏகாதிபத்திய, இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசுகளின் ஊடுருவல்கட்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்யவேண்டும்.

13)    இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக உழைக்கும் வர்க்கத்தின் நலன்களுக்கான அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து வெகுஜனப் போராட்ட மார்க்கத்தில் அணிதிரட்டி ஜக்கியமும் சமத்துவமும் சுதந்திரமும் சுபீட்சமுமுள்ள புதிய இலங்கையைக் கட்டி எழுப்புவோம்.

14)    உலகின் அடக்கி ஒடுக்கபட்ட நாடுகளினதும் மக்களினதும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போரட்டங்களுடன் ஒன்றிணைந்து முன்செல்வோம்.

எப்போ வருவாரோ?

ஆசிரியர் தலையங்கம்

எப்போ வருவாரோ?

தமிழருடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் அவர்களுடைய ஒற்றுமையையும் சொந்த ஆற்றலையும் நம்பியிருக்குமாறு அவர்களுடைய தேசியவாதத் தலைமைகள் தமிழரை என்றுமே ஊக்குவிக்கவில்லை. இது பொன்னம்பலம் ராமநாதன் காலந் தொட்டு வே. பிரபாகரன்  காலம் வரை நாம் கண்ட உண்மை.

அதற்குக் காரணங்கள் உள்ளன. ஏனெனில் மக்கள் தமக்காகப் பேசத் தொடங்கிவிட்டால், கேட்கக்கூடாத கேள்விகளைக் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் பிறகு மக்களுடைய பிரச்சனைகள் எவை என வரையறுக்கும் அதிகாரம் மேட்டுக்குடி அரசியல் தலைமைகட்கு இருக்காது. அதுவுமல்லாமல் மேட்டுக்குடி மேலாதிக்கத்தின் ஒவ்வொரு அம்சமும் கேள்விக்கும் எதிர்ப்புக்கும் உட்படத் தொடங்கிவிடும். பிறகு யார் எங்கே இருப்பது என்பதற்குக் கட்டுப்பாடே இல்லாமல், அரசியலின் முகமே மாறிவிடலாம்.

தமிழர் அரசியல் கடந்த நூற்றாண்டிற் கணிசமாக சனநாயகப் பட்டுள்ளது என்பது உண்மை. ஆனாலும் அந்தச் சனநாயகத்தின் செயற்பாட்டுத் தளம் தேர்தல் அரசியலுக்கு மட்டுப்;பட்டே இருந்து வந்தது. 1961ம் ஆண்டின் சத்தியாக்கிரகம் முதலாகப் பொங்கி அடங்கி அழிவில் முடிந்த ஆயதப் போராட்டம் வரை, எந்த ஒரு தமிழ்த் தேசியத் தலைமையும் மக்களை ஒரு போராட்டச் சக்தியாகக் கற்பனை செய்ததில்லை. இப்போது சலுகைகளுக்காகக் கையேந்தும் பிச்சைக்காரர்களாக மக்களைக் கருதுகிற ஒரு போக்கு வலுப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே இப்போதைய தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் தேசிய இனப் பிரச்சனையிற் கடைப்பிடிக்கும் அணுகுமுறையை நோக்க வேண்டியுள்ளது. இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையை இன்னமும் சிங்களவர்-தமிழர் பிரச்சனையாகவே நோக்குகிற போக்கு இன்னமும்; தொடர்கிறது. அமெரிக்காவையும் மேற்குலகையும் ராஜபக்சவுக்கு (அதாவது சிங்களவர்கட்கு) எதிராகப் பயன்படுத்தலாம் என்ற கனவு ஒரு புறமும் இந்தியக் குறுக்கீட்டைப் பற்றிய மூட நம்பிக்கைகள் இன்னொரு புறமும்  அவர்களது இறுதிப் பற்றுக்கோடுகளாக உள்ளன.

அதன் பயனாக, இப்போது மேற்குலகம் நேரடியாகவும் ஐ.நா. மூலம் மறைமுகமாகவும் கொடுக்கிற நெருக்குவாரங்களை எல்லாம் தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கிலானவை என்று கருதுகிற ஒரு போக்கு வளர்கிறது. ராஜபக்சவைப் போர்க் குற்றங்கட்காக அமெரிக்கா தண்டிக்கும் என்ற நம்பிக்கை புலம் பெயர்ந்த தமிழ்த் தேசியவாதிகளிடையே வலுவாக உள்ளது. அதுவே அவர்கட்குப் போதுமானதாகவும் இருக்கலாம். தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிடையே அது ஏறத்தாழ ஒரு வெறியாகவே புலப்படுகிறது.

சர்வதேசக் குற்ற நீதிமன்றம் சூடானின் அல் பஷீர் முதலாக லிபியாவின் கடாஃபி வரை அமெரிக்காவின் ஆணைக்குட்படாத ‘மனித உரிமை மீறற் குற்றவாளிகளைப்’ பிடிக்க விடுத்துள்ள பிடியாணைகள், இலங்கையின் விடயத்திலும் அவ்வாறு நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளன. அவ்வாறு நடக்கலாம்@ நடக்காமலும் போகலாம். ஆனால், அதற்கும் தமிழ் மக்களின் பிரச்சனைகளின் தீர்வுக்கும் ஒரு உறவுமில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்வது நல்லது.

போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் விசாரிக்கப் படுவது முக்கியமானது. போரின் கொடிய உண்மைகளை முழு நாடும் அறிவது முக்கியமானது. ஆனால் அந்த விசாரணைகளை யார், ஏன் வலியுறுத்துகிறார்கள் என்பதைப் பற்றிய தெளிவு தேவை. அதை விடவும், அக் கொடுமைகள் நிகழ முழு உடந்தையாக இருந்த நாடு எது எனவும் அனைத்தும் நடக்கையில் பார்த்திருந்து விட்டு இப்போது மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்று பாசாங்கு செய்கிற நாடுகள் எவை எனவும் நினைவூட்டத் தமிழ்த் தலைமைகள் விரும்ப மாட்டா. அதே விதமான கனவுகனை வளர்க்கிற தமிழ் ஊடக வணிகர்களும் விரும்ப மாட்டார்கள்.

இச் சூழலில், தமிழ் மக்களையும் முழு நாட்டையும் எதிர் நோக்குகிற உடனடி, நீண்ட கால அபாயங்கள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தோல்வி எவ் வடிவத்தில் வந்திருந்தாலும் அது தேசிய இனப் பிரச்சனையின் தீர்வுக்கு இட்டுச் செல்லும் என்று நமது கட்சி நம்பவில்லை. போரின் முடிவு, தேசிய இனப் பிரச்சனையை மோசமாக்கியுள்ளதே ஒழியத் தீர்வை நோக்கிய பயனுள்ள முன்னெடுப்புக்கு வழி கோலவில்லை. அரசாங்கமும் தமிழர் தேசியக் கூட்டமைப்பும் பேசுவதை வரவேற்கும் அதே வேளை, பேச்சுக்களின் பின்புலமும் அவை நடைபெறும் விதமும் மகிழ்ச்சி தரவில்லை எனவுங் கூறவேண்டும். இந்திய வற்புறுத்தலை நம்பி ஒரு தரப்பும் அதைத் தட்டிக்கழிக்கும் நோக்கில் மறு தரப்பும் நடத்துகிற பேச்சுக்கள் பயன் தரா என்பது ஊகிக்க எளியது.

அமெரிக்காவிடமிருந்து தன்னைக் காக்கச் சீனாவையும் ரஷ்யாவையும் நாடுகிற நிலைக்கு இலங்கை அரசாங்கம் உள்ளாகி இருக்குமளவுக்குச் சீனாவுடனான அதன் நட்பை விரும்பாமல் அமெரிக்கா அதனை நெருக்குகிறதாகவும் கொள்ள இடமுண்டு.
உடனடியாக, இலங்கையைத் தம் மேலாதிக்கத்துக்குட் கொண்டு வரத் துடிக்கும் நாடுகள் இந்தியாவும் அமெரிக்காவுமே. சீனாவும் யப்பானும் தமது வணிக ஆதிக்கத்தை வலுப்படுத்த முனைப்பாக உள்ளன. முடிவில் இலங்கை எந்த அந்நியப் பொருளாதார, அரசியல் வல்லரசின் ஆதிக்கத்துக்கு உட்பட்டாலும், அந்த வல்லரசு வேண்டுவது தனது முதலீட்டுக்குப் பாதுகாப்பும் லாபத்துக்கு உத்தரவாதமுமே. அதை எந்தச் சர்வாதிகார ஆட்சி வழங்கினாலும் அதையிட்டு அந்த வல்லரசு கவலைப்படாது. உண்மையில், வலிய ஒரு சர்வாதிகாரம் அதற்கு வசதியானதுங் கூட.

இலங்கையில் இப்போது சனநாயகமும் கருத்துச் சுதந்திரமும் பெரும் மிரட்டலுக்கு உட்பட்டுள்ளன. போரின் பின்பு நிலைமைகள் மோசமாகியுள்ளன என்பதில் ஐயமில்லை. மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க இயலாமல் அரசாங்கம் நாட்டை மேலும் கடனாளியாக்கிச் சர்வதேச நாணய சபையின் ஆணைகட்குப் பணிந்து மக்கள் மீது சுமைகளை ஏற்றுகிறது. பயங்கரவாதத்தைக் காட்டி மக்களை ஏய்ப்பது இனிக் கடின மானாலும் சர்வதேசச் சதிகள் பற்றிப் பேசலாம். என்றாலும், மக்களின் எதிர்ப்பைச் சமாளித்துத் திசைதிருப்பப் பேரினவாத அரசியல் மட்டும் போதாது. எனவே நேரடியான அடக்குமுறை தேவை. அதை நாம் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் உட்படப் பல இடங்களிலும் கண்டுள்ளோம்.

போர் முடிந்தும் அரச இயந்திரம் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கத்தை மீண்டும்; பேரினவாத யூ.என்.பியிடம் கொடுப்பதால் சனநாயகம் மீண்டுவிடாது. ஜே.வி.பி. தனது நம்பகத்தன்மையை நிறுவக்கூடிய விதமாக இதுவரை எதையும் செய்யவில்லை.

நாட்டின் தேசிய இனப் பிரச்சனையும் சனநாயக, மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் என்பனவும் ஒன்றுடனொன்று பிணைந்தவை என நாமறிவோம். அவற்றைச் சரிவரக் கையாள இன்றைய பாராளுமன்ற அரசியல் பம்மாத்துக்கு அப்பால் ஒரு மாற்று வழி வேண்டும் என அனைவரும் உணர வேண்டும்;. அதை வழங்கும் ஆற்றலும் நிறைவேற்றும் கடமையும் அனைத்து நேர்மையான இடதுசாரி, முற்போக்கு, சனநாயகச் சக்திகளிடமுமே உள்ளது.

இஸ்லாம் ஆபத்தில் இல்லை

ஹபிப் ஜலிப்
(1928-1993)

ஆபத்தில் உள்ளோர் காசு நிறைந்த சேம்பேறிச் செல்வந்தர்கள்
நொருங்குகிற சுவர்கள்
நூற்றாண்டுகளின் குப்பைகளை உடைக்கப் போகின்றன
இஸ்லாம் ஆபத்தில் இல்லை
மண்ணின் உரிமைகள் யாவையும் சில குடும்பங்கள் கொண்டிருக்க
நபி பெருமானைத் தொழுவோர் மகிழ்வற்றிருப்பதேன்?

ஆபத்தில் உள்ளோர் வேட்டை விலங்குகன்
வீதிகளில் ஆடம்பரமாய் ஓடும் பலவண்ணக் கார்கள்
அமெரிக்க உள்ளங்கள் அவர்கட்காக ஆடும்
இஸ்லாம் ஆபத்தில் இல்லை
எங்கள் சுலோகங்களால் மாளிகைகள் குலுங்கி நடுங்கும்
ஓங்கும் அலங்கரித்த கடைகட்கு நமது நம்பிக்கைகள் பணியா

ஆபத்தில் உள்ளோர் நெடுஞ்சாலைக் கொள்ளையர்கள்
வாய்ததைச் சுருட்டும் மேற்கின் வணிகர்கள்
வழிப்பறி செய்யும் கள்ளரும் தந்திரக்காரரும்
இஸ்லாம் ஆபத்தில் இல்லை
அமைதிப் பதாகையை உயர்த்திப் பிடித்து
மானிடம் அனைத்தையும் நேசித்து நாம் முன்னே செல்கிறோம்
ஏ ஜலிடீ;, முழு உலகையும் நேசித்தல் நமது பெருமிதமான கொள்கை

ஆபத்தில் உள்ளோர் மாளிகையின் கொன்றுண்ணி விலங்குகள்
மன்னர்களும் அவர்களது உடந்தையாளர்களும்
நவாபுக்களும் அவர் போன்ற துரோகிகளும்
இஸ்லாம் ஆபத்தில் இல்லை

Habib Jalib பாக்கிஸ்தானின் புகழ் பெற்ற, எதேச்சாதிகார-விரோத, இடதுசாரிக் கலிஞரராவார்

நவகொலனியத்தின் கீழ்த் தேசியமும் தேசமாதலும்: தேசங்களின் உருவாக்கம்

நவகொலனியத்தின் கீழ்த் தேசியமும் தேசமாதலும்
தேசங்களின் உருவாக்கம்

இமயவரம்பன்

தேச அரசு என்பது முதலாளியத்தின் நலன்கட்கு உதவுவதற்காக உருவானது. எனினும் முதலாளியத்தின் சமச்சீரற்ற வளர்ச்சியும் இயற்கை வளங்களையும் வணிகத்தையும் மனித வளங்களையும் தன் ஆளுமையின் கீழ்க் கொண்டிருப்பதற்காக அது கொலனியத்தைப் பாவித்தமையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ கொலனி ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களில் தேசங்களின் உருவாக்கத்திற்கும் விருத்திக்கும் பாதிப்புக்களைக் கொண்டிருந்தன. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாளியம் எகாதிபத்தியமாக விருத்தி கண்டமை, ஆட்சியாளர்களிடையே அதிகாரத்துக்கும் மேலாதிக்கத்துக்குமான மோதல்களையும் மீறி, ஒப்பீட்டளவில் தம்மிடையே நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவந்த பல்வேறு இனக் குழுமங்கட்கும் சமூகங்கட்கும் இடையிலான உறவை மோசமாக்கியது.
கொலனிய வல்லரசுகள் வௌ;வேறு பிரதேசங்களின் மீது ஆளுமை செலுத்த முற்பட்ட விதம் வல்லரசுக்கு வல்லரசு வேறுபட்டதுடன் வல்லரசின் தாயகத்தில் முதவாளிய உற்பத்தியின் முன்னேற்றத் திலும் தங்கியிருந்தது. அவை ஆளுமை செலுத்திய விதம், ஒரு பிரதேசத்தின் அதி முக்கியமான சமூக அமைப்பின் மீதும் தங்கியிருந்தது.

அரசியல் அல்லது இனத்துவ அடையாள அடிப்படையிற் சாத்தியமான வற்றைப் புறக்கணித்து, வரையறுத்த எல்லைகள் இல்லாத பிரதேசங் களினின்று, கொலனிய வல்லரசுகளின் நலன்கட்கு ஏற்றவாறு ‘தேசங்களும்’ தேச எல்லைகளும் உருவாக்கப் பட்டன. அதனை ―அடிப்படை வேறுபாடுகள் சில உள்ளபோதும்― லத்தின் அமெரிக்காவிலும் மத்திய கிழக்கின் அரபுப் பிரதேசங்களிலும் ஆபிரிக்காவிலும் அரசுகளின் தோற்றம், காட்டி நிற்கிறது.
மாறாகத், தென் ஆசியாவில், முழு ஐரோப்பாவையும் விடப் பன்மைப்பட்ட இன, மொழி, மதப், பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட ஒரு பெருநிலப்பரப்பைப் பிரித்தானியக் கொலனியம் தனி ஒரு அரசாக்கியது. சீனாவைத் தம் ஆளுமைக்குட்படுத்திய கொலனிய வல்லரசுகள், அங்கு நேரடிக் கொலனி ஆட்சியை நிறுவவில்லை. மாறாக, ஒப்பிடுகையிற் சிறிய, ஆனால் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களைக் கட்டுப்படுத்தினர். இன-மொழி அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் தனித்துவமான வியற்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகியவற்றைக் கொண்ட பிரதேசங்கள் பிரெஞ்சுக் கொலனியத்தின் கீழ் இந்தோசீனம் எனப்பட்ட கொலனிய சமஷ்டி ஆகின.

கொலனி ஆட்சி தனது முடிவை நெருங்கியதும், எகாதிபத்தியம் நவகொலனியக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்த முற்பட்டது. சாத்தியமான இடத்துச், சில சமயம், தேசிய அடிப்படையின்றி நாடுகளைப் பிரித்தும்,  சில சமயம், நாடுகளின் விடுவிக்கப்படாத பகுதிகளைக் கைவிடாமலும், நேரடிக் கட்டுப்பாடு தொடர்ந்தது. சீனாவில் கோமின்டாங் ஆட்சி தோற்றதை அடுத்து, சீனாவின் தாய்வான் தீவில் ஜியாங் கைஷேக் சீனக் குடியரசை நிறுவுவதற்கு அமெரிக்கா உதவியது. அமெரிக்க வற்புறுத்தலால், 1972 வரை, அதுவே, சீனாவின் சட்டரீதியான அரசாங்கமாக ஐ.நா.வால் அங்கீகரிக்கப் பட்டது. சீனாவின் மீது சுமத்தப்பட்ட அரசியல், பொருளாதாரத் தனிமைப்படுத்தலால், சீனப் பிரதேசங்களான ஹொங் கொங்கையும் மக்காவுவையும், முறையே, பிரித்தானியாவிடமும் போர்த்துக்கலிடமும் இருந்து விடுவிப்பதை ஏறத்தாழ 20ம் நூற்றாண்டின் முடிவு வரை தடுக்க ஏகாதிபத்தியத்திற்கு இயலுமாயிற்று. கோமின்டாங் ஆட்சி சீனாவின் சட்டரீதியான அரசாங்கம் என்ற தகுதியை இழந்ததும், சீனாவிடமிருந்து சுதந்திரம் கோருமாறு, தாய்வானின் பிரிவினை வாதிகளுடன் அமெரிக்கா சதி செய்தது.

வியற்நாமில் கொலனிய ஆட்சியின் முடிவையடுத்தும் கொரியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களது தோல்வியையடுத்தும், அந்த நாடுகளை நீண்டகாலமாகப் ―வியற்நாமை 1975 வரை, கொரியாவை இன்று வரை― பிரிவினைக்குட்படுத்தியே அமெரிக்க ஆதிக்கம் அங்கு இயலுமாக்கப்பட்டது. மறுபுறம், ஏகாதிபத்தியம், மலாயாவில் மலாயரின் ஆதிக்கத்தை ஊக்குவித்ததற்கும் அப்பால், பெருமளவும் இந்தோனீசியாவின் கட்டுப்பாட்டிலுள்ள கலிமன்டான் (போர்னியோ) தீவின் வட பகுதியிலுள்ள சபாவையும் சராவக்கையும் மலாயாவுடன் இணைப்பதற்கு இந்தோனீசியாவின் கடும் எதிர்ப்பின் நடுவே,  1963ல் மலாயா, சிங்கப்பூர், சபா, சராவக் ஆகியவற்றைக் கொண்ட மலேசிய சமஷ்டியின் உருவாக்கத்தை ஆதரித்தது. (1964ல் சிங்கப்பூரில் நடந்த இனமோதல் ஒன்றையடுத்து, சிங்கப்பூர் மலேசிய சமஷ்டியினின்று விலக்கப்பட்டது). குறிப்பிடத்தக்க விதமாக, ஏகாதிபத்தியம், கலிமன்டான் தீவின் வடக்கிலுள்ள எண்ணெய் வளம் மிக்க சிறிய புரூனாய் எனும் சுல்தானிய அரசு சுதந்திர அரசாக இருப்பதை உறுதிப்படுத்தியது.

இவ்வாறு, ஏகாதிபத்திய நலன்களைச் சார்ந்து, கொலனிய ஆட்சியின் கீழும் நவகொலனிய ஆட்சியின் கீழும்  ஐரோப்பாவுக்கு வெளியேயிருந்த பிரதேசங்களும் மக்களும், நாடுகளாகத் தொகுக்கப் பட்டதை நாம் காணலாம்.

வெற்றிகரமான கொலனிய எதிர்ப்புப் போராட்டங்கள், அராபியத் தலைவர்கள் சிலரை அராபிய அரசியல் ஒற்றுமையின் அடிப்படையிற் சிந்திக்கத் தூண்டியது. எகிப்தையும் சிரியாவையுங் கொண்டு 1958ல் நிறுவப்பட்ட ஐக்கிய அரபுக் குடியரசு 1961ல் கலைந்தது. விரைவாக அதையடுத்து, எகிப்தையும் சிரியாவையும் ஈராக்கையுங் கொண்டதாக ஐக்கிய அரபுக் குடியரசை மீள நிறுவும் ஈராக்கிய ஆலோசனையும் தோற்றது. அரபு மக்கள் மத்தியில் அரபு ஐக்கியத்துக்கான விருப்பம் இருந்த போதும், ஆளும் மேட்டுக் குடிகளிடையில் உருவாகியிருந்த பிளவுகளும் அதிகார வர்க்க நலன்களும் ஏகாதிபத்தியத்துடனான கூட்டணிகளும், அனைத்து அராபியக் கூட்டமைப்புக்கு மட்டுமல்லாது. அரபு மக்களைப் பாதிக்கும் விடயங்களில் அரபு ஒற்றுமைக்கும் தடையாயிருந்தன என்பது இதனால் தெளிவாகிறது. அரபுத் தேசியம் பிளவுகளாற் பலவீனப் பட்டிராவிட்டால், சென்ற நூற்றாண்டில் ஒட்டோமன் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கு மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய அதிகாரம் நிலைத்து வந்திருக்க இயலாது. மூலோபாய முக்கியம் வாய்ந்த சில அராபிய அரசுகள் அமெரிக்காவின் வாடிக்கையாளர்களாக இருப்பதை உறுதிப்படுத்து வதற்கும் மேலாக, ஏகாதிபத்தியமும் சியோனிசமும், ஒடுக்கப்பட்ட மக்களின் கோபத்திற்கெதிராகத் தமது நிலைப்பிற்கு, அரபு மேட்டுக்குடிகளிடையிலான போட்டியின் அடிப்படையிலான அரபு உலக ஒற்றுமையீனத்திலேயே பெரிதும் தங்கியுள்ளன.

தொடர்ச்சியான குர்தியப் பிரதேசத்தை, முக்கியமாகத், துருக்கிக்கும் ஈராக்கிற்கும் ஈரானுக்கும் இடையே ஏகாதிபத்தியம் பிரித்தது. அதற்கும் மேலாக, ஈராக்கைப் பலவீனப்படுத்துவதற்குச் சுயநிர்ணயத்தைப் பாவித்துக் குர்தியர்கட்குத் தூண்டில் போடுவது அமெரிக்காவுக்குத் தேவையாகும் வரை, ஏகாதிபத்தியம், குர்திய சுயநிர்ணய உரிமையின் கடும் எதிரியாகவும் இருந்து வந்தது. எனினும், இதுவரை, துருக்கியக் குர்தியர்கள் இக் கணக்கிற்குள் வரவில்லை.

தென்னமெரிக்காவின் போர்த்துக்கீயக் கொலனிகள் ஏறத்தாழ ஒன்றாகவே பிரேஸில் என்ற ஒரு நாடாக இருந்து வந்த போதிலும், ஸ்பானியக் கொலனிகள், பெரும்பாலும், ஸ்பானியக் கொலனிய நிருவாக அலகுகளின் அடிப்படையிலான பல நாடுகளாயின. இன்றைய கொலம்பியா, வெனெசுவேலா, ஈக்குவடோர், பனாமா ஆகிய நாடுகளைக் கொண்ட க்றான் கொலம்பியக் குடியரசு (விசால கொலம்பியக் குடியரசு) முற்போக்குச் சிந்தனையாளரும் கொலனிய எதிர்ப்புப் போரில் முக்கிய பங்கு வகித்தவருமான சிமோன் டி பொலிவாரின் முன்முயற்சியால் நிறுவப்பட்டது. அது குறுகியளவு காலமே நிலைத்தாலும், தென்னமெரிக்க ஏகாதிபத்திய விரோத எழுச்சியின் நடுவே, பொலிவாரிய உந்துணர்வு பத்தாண்டுகள் முன்னர் புத்துயிரூட்டப் பெற்றுள்ளது.

பிரித்தானிய, பிரெஞ்சு, டச்சுக் கொலனிய ஆட்சியாளர்கள் தென்னமெ ரிக்காவில் தமது ஒப்பிடுகையிற் சிறிய பிரதேசங்களைப் பற்றிக்கொண்டிருந்தனர். அதே வேளை, ஸ்பானிய ஆட்சியின் நலிவு, வட அமெரிக்காவிலும் கரிபியன் பிரதேசத்திலும் பிரித்தானியருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் பிரதேசங்களை விட்டுக்கொடுக்கச் செய்தது. அதுவே, பின்னர், பிரித்தானியாவின் கீழான பிரதேசங்களிலிருந்து 1776ல் உருவான (இன்று பொதுவாக அமெரிக்கா என அறியப்படும்) ஐக்கிய அமெரிக்க அரசுகள் மேற்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் விரிவதை இயலுமாக்கிற்று. பிரெஞ்சுக் கொலனி ஆட்சி வட அமெரிக்காவில் தனது பிடியை இழந்து, 1763ல் க்வெபெக்கைப் பிரித்தானியருக்கும் 1803ல் லூயிஸியானாவை ஐக்கிய அமெரிக்க அரசுகட்கும் வரன்முறையாக விட்டுக்கொடுத்தது.

வட, தென் அமெரிக்காக்களில் நூற்றாண்டுகளாக நடைபெற்ற கொலனியக் குறுக்கீட்டால் உருப்பெற்ற தேசிய அடையாளங்கயைப் பற்றிய முக்கியமான விடயம் ஏதெனில், இன்னமும் அவற்றுக்குரிய மொழியும் பண்பாடும் மதமுங் கூட அந்தந்தப் பகுதிகளின் பழங் குடியினரது அடையாளங்களைப் புறந்தள்ளி, ஆக்கிரமிப்புச் சக்திகளின் அடையாளங்களைக் கொண்டனவாகவே கருதப் படுவதாகும். ஆபிரிக்கர்களும் அவர்களிலும் குறைவான எண்ணிக்கையில் இந்தியரும் (பெரும்பாலும் தென்னிந்தியர்) அடிமைகளாகவோ ஒப்பந்தக் கூலியாட்களாகவோ குடியேற்றப் பட்டமையும் இனக் கலப்பும் புதிய இனத்துவ அடையாளங்களைச் சேர்த்தன.
வெகுசன எழுச்சிகளும் இடதுசாரி அரசாங்கங்களும் பழங் குடிகளைத் தேசிய இனங்களாக அல்லது தேசிய சிறுபான்மையினராக அரச அங்கீகாரத்துக்கும் பழங்குடியினரது மொழிகட்குச் சட்டரீதியான அந்தஸ்திற்கும் வழி செய்தன. பெரூ 1975ல் க்வெச்சா, அய்மரா மொழிகட்கு அரசகரும மொழித் தகுதி வழங்கியது. வெனெசுவேலா 1999லும் பொலிவியா 2009லும் அனைத்துப் பழங்குடி மொழிகளை யும் அரசகரும மொழிகளாக்கின.

பல நாடுகளைக் கொண்ட தென்னமெரிக்காவையோ மத்திய அமெரிக்காவையோ போலன்றி, வட அமெரிக்கா மூன்று நாடுகளை மட்டுமே கொண்டது. அவற்றுள் அமெரிக்கா (ஐக்கிய அமெரிக்க அரசுகள்) 20ம் நூற்றாண்டிலும் தனது எல்லகளை விஸ்தரித்து வங்துள்ளது. அதே அமெரிக்கா இப்போது, ஏலவே பல நாடுகளாகப்  பிரிந்துள்ள தென்னமெரிக்காவில் பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவிக்கிறது. எனினும், பிரிவினைக்கான ஊக்குவிப்பு இனத்துவ அடிப்படையிலன்றி ஏகாதிபத்திய நலன்களுடன் இணங்கும் வர்க்க நலன்களின் அடிப்படையிலானது.

பழங்குடி மக்கள் முற்றாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அதைவிடப் பிற இனங்களுடன் ஏற்பட்டுள்ள கலப்பையும் கணிப்பலெடுப்போமாயின் எந்தவொரு பழங்குடிச் சமூகமும் ஒரு தேசமாக அமையும் சாத்தியப்பாடு பலவீனமானது. இருப்பினும், கடந்த இரு தசாப்தங்கள் மட்டில், பழங்குடி மக்கள் தமது உரிமைகளை வலியுறுத்தத் தொடங்கி உள்ளனர். பழங்குடி மக்களின் பன்முகப்பட்ட அடையாளங்களின் காரணமான இனத்துவ அடிப்படையிலான பிரிவினை இயலாதது மட்டுமன்றி அம் மக்களின் நலனுக்கு உகந்ததுமல்ல. எனவே வேண்டப் படுவன எவையெனின், நாட்டின் வளங்களில் அவர்கட்கு உரித்தான பங்கும் தத்தமது அடையாளத்தைப் பேணுவதற்கான உரிமையும் ஒவ்வொரு சமூகமும் அததற்கு அதிகம் பொருத்தமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்குமான உரிமையுமாம்.

இவ்வாறு வட, தென் அமெரிக்கக் கண்டங்கள் பரவலாகவும் வாழும் பழங்குடி மக்களின் ‘தேசியத்தின்’ அபிலாட்சைகள், உலகின் பிற பகுதிகளில் உள்ள ‘தேசியத்தின்’ அபிலாட்சைகளினின்று வேறுபடுகின்றன. வேண்டின் இந்தியாவில் ஓரங்கட்டப்பட்டுள்ள பழங்குடி மக்களின் ‘தேசிய’ அபிலாட்சைகளுடன் ஒப்பிடலாம். ஏகாதிபத்திய எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு என்பன போன்ற பண்புகள் அதற்கும் அடிமை முறை நீக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவில் விருத்தி பெற்ற “கறுப்பு உணர்வுநிலைக்கும்” பொதுவானவையாக உள்ளன.

தேச அரசுகளின் உருவாக்கம், ஐரோப்பா பரவலும் வாழ்ந்துவந்த ஜிப்ஸிகள் போன்ற நாடோடி மக்களை ஓரங்கட்டவும் அவர்களின் பாரம்பரியப் பிரதேசங்களை மறுக்கவும் வழி செய்தது. அத்துடன் ஐரோப்பாவின் துருவப் பிரதேசத்தின் சமி இனத்தோரின் பிரதேச உரிமையையும் கணிசமாகப் பலவீனப்படுத்தியது. தேச அரசுகளின் உருவாக்கம், குறிப்பாக எழுந்தமான முறையில் எல்லைகள் வகுக்கப்பட்ட ஆபிரிக்க நாடுகளில், சமூகங்களைப் பிரித்துள்ளதுடன் குலமரபுக் குழுமங்களினதும் இனக் குழுமங்களினதும் வாழ்வாதாரங்களையும் பாதித்துள்ளது.

சுயநிர்ணய உரிமை என்ற கருத்தாக்கம், கொலனிய அல்லது அந்நிய ஆதிக்கத்துக்குட்பட்ட பிரதேசங்களின் மக்கள் திரளினருக்கு மட்டுமே சுயநிர்ணய உரிமையை ஏற்கும் ஐ.நா. சபையாற் கணிசமாக விகாரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், அத்தகைய மக்கள் திரள்கட்குட் சிறுபான்மையினராக வாழும் பல குலமரபுக் குழுமங்கட்கும் இனக் குழுமங்கட்கும் அந்த உரிமை மறுக்கப்படுகிறது. இத்தகைய சிறுபான்மையினர் கொலனியப் பாங்கிலான பாரபட்சத்திற்கு உட்படுவதுடன், பெரும்பான்மை ஒன்றின் பேராற் செயற்படும் அரசொன்றின் கீழ், ஒரு பெரும்பான்மைக்குள் ஒன்றுபடுத்தப்படும் அல்லது இல்லாதொழியும் சாத்தியப்பாட்டை எதிர்நோக்குகின்றனர்.

கனிவளங்கட்கான உலகளாவிய தேடல் பழங்குடி மக்களின் இருப்புக்கு ஒரு மிரட்டலாகியுள்ளது. பழங்குடி மக்களைப் பாரபட்சம், இனவாதம், ஓடுக்குமுறை, ஓரங்கட்டல், சுரண்டல் ஆகியவற்றினின்று காக்கும் நோக்கிலான, “பழங்குடி மக்களின் உரிமைகள் பற்றிய ஐ.நா. பிரகடன வரைவை” (UN Draft Declaration on Rights of Indigenous Peoples) ஐ.நா. பொதுச் சபை 2006ம் ஆண்டு ஏற்றுக் கொண்டது. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசீலாந்து ஆகியன இட்ட கடும் முட்டுக்கட்டைகளிடையே அவ் வரைவை எழுதி உடன்பட, 20 ஆண்டுகள் சென்றன. உடன்பாட்டின் பின்பும் ஏகாதிபத்தியமும் அதன் வாடிக்கைக்கார அரசுகளும் பிரகடனத்தின் நெறிகளை மீறியே செயற்பட்டு வருகின்றன. மேலுந் தகவல்கட்கு: அனுப் ஷா எழுதிய கட்டுரையைப் பார்க்கலாம்.  (Anup Shah, “Rights of Indigenous People”, www.globalissues.org/article/693/rights-of-indigenous-people).

தேசங்களதும் தேசிய இனங்களதும் சுதந்திரத்தை மறுப்பதில் ஏகாதிபத்தியம் மோசமாக நடந்துகொண்டுள்ள போதும், இஸ்ரேலிற் போன்று மக்களை இடம்மாற்றியும் யூகொஸ்லாவியாவிற் போன்று இனக்குழும மோதல்களையும் தேசிய இன மோதல்ளையும் தூண்டி நாடுகளைப் பிரித்தும் புதிய தேசங்களின் உருவாக்கத்துக்கு உதவியுள்ளது. எகாதிபத்தியம் எல்லை வகுத்த நாடுகளான எதியோப்பியாவிலும் சூடானிலும், முறையே, எரித்திரியாவினதும் தென் சூடானினதும் சுயநிர்ணயத்திற்கான வாதங்கள் வலுவானவை. பூகோள அரசியற் காரணங்கட்காக, எதியோப்பியாவில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, ஏகாதிபத்தியம் எரித்திரியா பற்றித் தனது நிலைப்பாட்டைத் தலைகீழாக்கியது. சூடானில், தென் சூடானுக்குச் சுயாட்சி வழங்கப்பட்டுப் பல காலங் கடந்த பின்பு, தென் சூடானின் பிரிவினையை ஊக்குவித்தது. இன்று சோமாலியாவைப் பிளவுபடுத்த ஏகாதிபத்தியம் எடுத்துவரும் முயற்சிகளும் அவ்வாறானவையே. 1960களின் முற்கூற்றில் கொங்கோவிலிருந்து கட்டாங்காவையும் 1960களின் பிற்கூற்றில் நைஜீரியாவிலிருந்து பியாஃப்ராவையும் பிரிக்கும் முயற்சிகளினின்று அவை வேறுபட்டவையல்ல.

யூகோஸ்லாவியாவின் உடைப்பும் பின்னர் சேர்பியாவிலிருந்து கொசோவோ மாகாணத்தின் பிரிப்பும் எவ்வாறான தன்னலங் கடந்த சிந்தனைகளாலும் தூண்டப்படவில்லை. மாறாக, அமெரிக்காவுக்கும் சில ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசுகட்கும், பலவீனமாக எனினும், ஏகாதிபத்திய ஆதிக்கத்தை எதிர்த்த ஒரு அரசிடமிருந்து மேற் குறித்த பிரதேசங்களின் மீதான கட்டுப்பாட்டைப் பறிப்பது தான்.

முன்றாம் உலகம் பன்முக அடையாளங்களைக் கொண்டது. எனினும் சமூகங்கள் அவற்றுடன் சமாளித்துள்ளன; பாரிய இன மோதல்க ளின்றி நாடுகள் இருந்துள்ளன. முன்றாம் உலகின் தேசிய இனப் பிரச்சனையின் சிக்கலுக்குப் பெருமளவிலான காரணம் முன்னர் கொலனித்துவமும் இன்று ஏகாதிபத்தியமுமே. சனத் திரள்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும் தேச அரசுகளின் உருவாக்கம் பற்றியும் ஏகாதிபத்தியத்தின் ஆர்வம், பூகோள ஆதிக்கம் எனும் ஒரே நோக்கத்தால் இயக்கப்படுவதாகும்.

எங்கெங்கு அரசுகள் ஏகாதிபத்தியத்தை மறுத்து நிற்கின்றனவோ அங்கெல்லாம் ஏகாதிபத்தியம் தேசியவாத நோக்கங்களைத் தீவிரமாக ஆதரிக்கும் வாய்ப்பண்டு. பிற இடங்களில், தேசிய இனங்களினதும் பழங்குடிகளினதும் ஒடுக்கலை அது ஆதரிக்கும். ஏல்லாவிடத்தும் ஏகாதிபத்தியம் மக்களைப் பிரித்தே வைத்துள்ளது.

எனவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பாடம் ஏதெனின், தத்தமது தேசியப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, ஏகாதிபத்தியத்தினதும் மேலாதிக்கவாதிகளதும் குறுக்கீடற்ற முறையில் அவற்றைத் தீர்க்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும் என்பது தான்.

சர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும்: சில குறிப்புகள்

சர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும்: சில குறிப்புகள்

அஸ்வத்தாமா

அறிமுகம்
இன்று லிபியாவில் நேற்று ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் என எல்லாவற்றிலிலும் ‘சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் பற்றி வியப்பதற்கு எதுவுமில்லை. அது எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்கிறது. இதற்கிடையில் லிபியாவில் பொதுமக்களைக் காப்பாற்ற தலையிட்ட ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் இலங்கைத் தமிழர் விடயத்தில் அவ்வாறு நடந்துகொள்ளாமல் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. நாங்கள் வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இற்றைக்குப் பதினேழு ஆண்டுகளுக்கு முன் ருவாண்டாவில் நூறு நாட்களில் எட்டு இலட்சம் டுட்சி சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்ட போது ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. இக் காலப்பகுதியில் ஐ.நாவின் அமைதிகாக்கும் படைகளுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் ரோமியோ டிலார் (Romeo Delaire) தனது ‘பிசாசுடன் கை குலுக்குதல்” (Shaking Hands with the Devil) என்ற நூலிற் பின்வருமாறு எழுதுகிறார்:
‘மேற்குலகுக்கும் ஐ.நாவிற்கும் ருவாண்டாவில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று படுகொலைகள் தொடங்கிய போதே தெரியும். ஆனால் யாருக்கும் ஆபிரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் உள்ள நாடு பற்றி அக்கறை இல்லை. மூலோபாய ரீதியில் தேவைப்படாத கறுப்பர்களைக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இனப் படுகொலைகளைப் பற்றிக் கவலைப்பட யாரும் தயாராக இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில், ருவாண்டாவில் நடந்து கொண்டிருந்ததெல்லாம் நாகரீகமற்ற பழங்குடி இனக் குழுமங்களுக்கிடையிலான சண்டை மட்டுமே”.

இது ருவாண்டாவிற்கு மட்டுமல்ல, இலங்கை உட்பட்ட பல நாடுகளிலும் ‘சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது, இனியும் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதற்கான வரலாற்றின் சாட்சியாக இருக்கிறது. அடக்குமுறையாளர்களும் ஆளும் வர்க்கங்களும் சர்வதேசச் சமூகம் பற்றி அதிகமாகவே பேசுவதைக் கேட்கிறோம். தங்களின் அடக்குமுறைகளையும் அராஜகங்களையும் கேள்விக்கு உட்படுத்தாத வரை, சர்வதேசச் சமூகம் பற்றி மகிழ்ச்சி உடையவர்களாகவே ஆளும் வர்க்கத்தினரும் அடக்குமுறையாளர் களும் இருப்பர். அடக்குமுறைகளினதும் ஆதிக்கங்களினதும் ஒட்டு மொத்த வடிவமாக இருக்கும் சர்வதேசச் சமூகம் எனப்படுகின்ற ஏகாதிபத்தியத்தின் தலையீட்டின் மூலம் அடக்கி ஆளப்படும் மக்களினது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நம்புவது இன்றைய பொதுவான போக்காக இருக்கிறது. அடக்குமுறை அரசு யந்திரத்திற்கு எதிராக மக்களின் போராட்ட சக்தியைப் புதிய போக்கிற்கு ஏற்பக் கட்டி வளர்க்க முடியாத ஜனநாயக இடதுசாரிச் சக்திகளும் சர்வதேசத் தலையீடுகளைத் தத்தம் நிலையில் நின்று வரவேற்பவர்களாகவே இருக்கின்றனர்.

அதேபோல, முரண்பாடுகளை ஊக்குவித்து மோதல்களை உருவாக்கி யுத்தங்களைத் திணித்து அதிற் பாதிக்கப்படுவர்களுக்கும், அதே வேளை, அடக்குமுறை அரசாங்கங்களுக்கும் மனிதாபிமான ரீதியாக உதவுவதாகக் கூறி உலக மேலாதிக்க சக்திகள் செயலாற்று கின்றன. மேலும், இயற்கை அனர்த்தங்களின் போதும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் எனவும் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க எனவும் மேலாதிக்கச் சக்திகள் நாடுகளில் தலையிடு கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சர்வதேசச் சமூகம் என்ற போர்வைக்கு உள்ளிருக்கும் ஏகாதிபத்தியத்தை வரவேற்று உபசரிக்கும் நிலையில் பல்வேறு பிரிவினர் இருக்கின்றனர்.

இதன் பின்ணணியிலேயே விடுதலை பற்றியும் விடுதலைக்கான போராட்டம் பற்றியும் பேச முடிகிறது. விடுதலைப் போராட்டம் தேசிய வாதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பல சந்தர்ப்பங்களில் தேசியவாதம் சர்வதேசச் சமூகத்துடன் ஒட்டி உறவாடுகிறது. அந்நியத் தலையீட்டைக் கூவி அழைக்கிறது. விடுதலைப் போராட்டத்திற்கு குழி பறிக்கிறது. இவை வரலாற்று நோக்கில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை. ஏனெனில் தேசியத்தின் திசைவழியானது வரலாறு பற்றிய புனைவுகளாலும் நம்பிக்கைகளாலுமே கட்டியமைக்கப் படுகிறது.  நம்மிடம் வந்து நாம் பழங்காலத்தில் நாகரீகச் சிகரங்களை தொட்டுக் கொண்டு இருந்தோம் என்று யாராவது சொல்லிவிட்டால், நாம் புளகாங்கிதம் அடைகிறோம். நாம் தற்போது எவ்வளவு தூரம் முன்னேறியிருக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் முன்னேறாமல் பின் தங்கி இருந்திருந்தால் உடனே அதற்கான காரணத்தை குறிப்பிட்ட உள்நாட்டு, வெளிநாட்டுச் சதிகாரர்களிடம் நாம் தேட ஆரம்பித்து விடுகிறோம். பெனடிக்ற் அன்டர்சனின் (Benedict Anderson) கற்பனையான சமூகங்கள் (Imagined Communities) என்ற நூல், தற்போதைய நவீன யுகத்தில் புதிதாக நாம் சுவீகரித்த தேசிய விருப்பின் அடிப்படையில் நமது கடந்த காலத்தை கற்பனையில் மீளக் கட்டமைப்பது குறித்து நமது கவனத்தை ஈர்க்கிறது. உண்மையில் இந்த குறுகிய வாதம் வெறுமனே திரிந்து போன தேசியவாதம் மட்டும் அல்ல. சொல்லப்போனால், மதம், இனம், சாதி என்பது போன்ற ஒரு கற்பனை விசித்திரம் தான். இதுபோன்ற பல்வேறு அடையாளங்கள் கலந்தும் முரண்பட்டும் உள்ளார்ந்து வினை புரிந்தும் இருக்கும் ஆசிய மற்றும் ஆபிரிக்க சமூகங்களில் நீண்ட நெடுங்காலமாகத் தமது சார்புநிலைக்கு தகுந்தாற் போல் வரலாற்றை மீளக் கட்டமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன.

வரலாற்றின் ஆபத்துக் குறித்து வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் (Irfan Habib) பின்வருமாறு சொல்கிறார்:
‘கடந்த கால மோகம் என்பது ஒரு தனிமனிருக்கு எப்படியோ அது போலத் தான் வரலாறு என்பது நாட்டு மக்களுக்கு என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ‘சிலரது சதிகாரர்களின் சதி காரணமாய் என்னை நான் உணர்ந்து கொள்வது தவறிவிட்டது’ என எனது மனதுக்குள் முடிவு செய்தால் அது என்னை எங்கு கொண்டுபோய் விடும்? இந்த மாதிரியான தவறான எண்ணங்கள் நான் எனது சக மனிதர்களுடன் சுமுகமான உறவு கொண்டிருப்பதைப் பாதிப்பதோடு மட்டுமன்றிக் கடைசியில் எனக்குள் புதைந்து கிடக்கும் ஊனங்களையும் துகிலுரிந்து காட்டிவிடும். இப்படியாகத் தனி யொருவருக்கு நடப்பதே, கண்டிப்பாகக் கற்பனை வரலாறு தந்த போதையில் மிதக்கும் நாட்டு மக்களுக்கும் நடக்கும். பொய் வரலாறு எவ்வளவுதான் உடனடி, குறுகிய காலப் புகழாரங்களைச் சூட்டிய போதிலும், அது, மக்களுடைய ஒழுக்கநெறி எனும் உயிர் நரம்பைக் கத்தரித்து, முன்னேறுவதற்கான அவர்களுடைய திறனை அறுத்து எறிந்து விடும். ஆகவே இந்த மாதிரியான கதையளக்கும் வரலாறுகளை எந்த விதத்திலும் நாம் நியாயப்படுத்தி விடமுடியாது”.

வரலாற்றின் கைதியாக ஒரு சமூகம் இருக்கும்வரை, அச் சமூகம் தனது முன்னேற்றத்திற்கான தடையைத் தானே இட்டுக் கொள்கிறது. இன்றைய நவகொலனித்துவ உலக ஒழுங்கில், தேசியம் பல புதிய வடிவங்களை எடுக்கிறது. எல்லோரும் உலகமயமாகி இருக்கிறோம். ஆனால் எம் நினைவுகளையும் பூர்வீக வீரப்பிரதாபங்களையுஞ் சுமந்தபடி தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். வரலாற்றைச் சரியாக விளங்கிக்கொள்ள முடியாதபடி நம் முன்முடிவுகளோடு நாம் கட்டுண்டிருக்கிறோம். உரிமைகட்கான அவாவும் ஜனநாயகத்திற்கான தேவையும் விடுதலைக்கான போராட்டங்களும் வரலாறு முழுவதிலும் நிறைந்து இருக்கிறது. இனிவரும் வரலாற்றிலும் அவ்வாறே இருக்கும். அதனடிப்படையில் விடுதலைக்கான போராட்டங்களில் சர்வதேசச் சமூகம் எவ்வாறு நடந்துகொண் டிருக்கிறது என்பதையும் வரலாற்று நோக்கிலும் போக்கிலும் பார்க்கும் முயற்சியே இக் கட்டுரை.
வரலாற்றுப் பார்வை
பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில், எல்லா மனிதர்களும் சமமானோராகப் படைக்கப்பட்டவர்கள் என்ற அமெரிக்கக் குடியரசின் கம்பீரமான பிரகடனம், அடுத்து வந்த எண்பது ஆண்டுகளுக்கு லட்சக்கணக்கான கறுப்பு அமெரிக்கர்களை அடிமைகளாக இருக்கும் படி அரசியல்மைப்புச் சட்டத்தின் மூலம் அனுமதித்ததனாற், பொருளற்றதாகியது. அமெரிக்கப் புரட்சியிலிருந்தும், பிரெஞ்சுப் புரட்சியிலிருந்தும் துவங்கிய பூர்ஷ்வா ஜனநாயகத்திற்கான திட்டம் மூன்று முக்கிய தன்மைகளை உள்ளடக்கியிருந்தது.

1.    அரிஸ்டாட்டில் துவங்கி ரூஸோ வரையானவர்களின் மிக முற்போக்குத் தன்மை வாய்ந்த அரசியற் சிந்தனைகளை விட ஜனநாயகம் குறித்த கொள்கை அளவில் மிகக் குறைவான சுருங்கிய பார்வையே அது கொண்டிருந்தது.

2.    துவக்க காலத்திலிருந்தே அது பொருளாதாரம் என்பதை ஜனநாயகத்திலிருந்து தனிமைப்படுத்திச், சமத்துவம் என்பதற்கு வெறும் சட்டப+ர்வமான விளக்கமளித்துப் மக்களிற் பெரும் பகுதியினரை வாக்களிப்பதிலிருந்து எவ்வளவு தூரம் விலக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலக்கி வைத்தது. (“மக்களாகிய நாம்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனச் சொற்றொடர் ஒரு வெற்றுச் சொற்றொடராகும். அது பெண்களையோ வெள்ளையரல்லாத பூர்வ குடியினரையோ ஆபிரிக்காவை மூலமாகக் கொண்ட அடிமைகளையோ குறிப்பதல்ல).
3.    பூர்ஷ்வா அமைப்பு எப்போதுமே தன் சாதனைகளைப் பெருமளவுக்கு மிகைப்படுத்திக் கூறியுள்ளது.

எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும், முதலாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய காலம் வரையிலும், ப+ர்ஷ்வா ஜனநாயகம் முழுமை அடையவில்லை. முடியாட்சி என்பதே அன்றைய நாட்களின் சட்டமாக இருந்தது. ரஷ்யாவிலும் ஜேர்மனியிலும் ஒஸ்ற்ரியாவிலும் ஏகாதிபத்திய முடியாட்சிகள்@ பிரிட்டனில் அரசியல் சட்ட அமைப்புக்குட்பட்ட முடியாட்சி@ ஸ்பெயினிலும் போர்த்துக்கலிலும் அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி அமைப்பபைவிடத் தாழ்ந்த முடியாட்சி அமைப்புக்கள் என வேறுவேறு வகைப்பட்ட, ஆனால் முடியாட்சியை மையப்படுத்திய, அரசுகளே இருந்தன. முதலாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய சூழலில் பொல்ஷ்விக் புரட்சி ரஷ்ய முடியாட்சியை அகற்றியது. ஆனால், ஜேர்மனி, இத்தாலி, ஒஸ்ற்ரியா, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் பாரம்பரிய அரசுகள், நிலையான ஜனநாயக அமைப்புகளுக்கு வழிவிடுவதற்கு மாறாக, ஃபாசிசத்திற்கும் ராணுவ சர்வாதிகாரத்துக்கும் வழிவகுத்தன.

மன்னர்களும் ஃபாசிஸவாதிகளும் ராணுவ சர்வாதிகாரிகளும் தராளவாத  ஜனநாயகவாதிகளும் மிகத் தீவிரமாக தங்களுக்கிடையே கணக்குத் தீர்த்துக் கொண்டிருந்தபோது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில நிகழ்வுகள் நடைபெறத் துவங்கின. அதுவும் அவர்களின் முதுகுக்கு பின்னாலேயே ஆளும் அமைப்புகளுக்கு எதிராக எழுந்தவற்றில் நான்கு வகையான சவால்கள் மட்டும் நீண்ட காலத்திற்கு தீர்மானகரமானவையாக விளங்கின.

1.    சொத்துடமையாளர்களின் ஆட்சிக்கெதிரான தொழிலாளர், விவசாய இயக்கங்கள்.

2.    உலகின் பிற பகுதிகளில் ஐரோப்பிய கொலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள்.

3.    ஆணாதிக்க சக்திக்கும் முன்னுரிமைக்கும் எதிராகப் பெண்களின் சமத்துவத்திற்கும் முன்னேற்றத்திற்குமான போராட்டங்கள்.

4.    அடிமைத்தனத்திற்கும் இனவெறிக்கும் எதிராக வெள்ளை இனத்தவர்களின் குடியேற்ற நாடுகளான வட அமெரிக்காவிலும் கரிபியன் பகுதியிலும் மையம் கொண்ட உலக அளவிலான போராட்டங்கள்.

ரஷ்யாவின் பொல்ஷ்விக் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து அலையலையாக உருவான புரட்சிகள் குறிப்பாக இத்தாலி, ஹங்கேரி மற்றும் ஜேர்மனியில் மிகத் தீர்மானகரமான முறையில் தோற்கடிக்கப் பட்ட பிறகு, நாஜிகளின் மூன்றாம் ரைஹ் (Third Reich) உருவான எல்லையற்ற வெற்றிக் களிப்பில் அதுவே “வரலாற்றின் முடிவு” என் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 1990இல் சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பிறகு அமெரிக்கா வெற்றிவாகை சூடிய பின்னணியில், மீண்டுமொரு முறை, “வரலாற்றின் முடிவு” என்பது அறிவிக்கப்பட்டது. [மேலதிக தகவல்களுக்கு ஃபிரான்சிஸ் ஃபுகுயாமாவின் (Francis Fukuyama) “வரலாற்றின் முடிவு” (The End of History and the Last Man) என்ற நூலை வாசிக்கவும்ஸ. சீனப் புரட்சிக்குப் பிறகு, 1950களிலும் அல்ஜீரியா முதல் இந்தோசீனம் வரை பல்வேறு இடங்களில் புரட்சிகரமான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதிலும் அமெரிக்காவின் பொருளாதார வல்லுநர்களின் “மூலதனத்தின் பொற்காலம்” துவங்கிவிட்டது என்ற கூற்றும் புகழ்மிக்க அமெரிக்க சமூகவியலாளர்களின் “தத்துவத்தின் முடிவு” என்கிற ஆய்வும் சேர்ந்து மூலதனத்தின் முன்னால் எல்லாத் தத்துவங்களும் பின்வாங்கிவிட்டன என்ற பொருளில் உறுதியான எதிர்ப் புரட்சிப் போக்குக்களாக இருந்ததைக் காணமுடிந்தது. இதனடிப்படையில் மூலதனம் பிரதானமாக்கப்பட்டு அதனடிப்படை யிலே அனைத்தும் வியாக்கியானம் செய்யப்பட்டன.

சர்வதேசச் சமூகம், சோவியத் யூனியனின் சிதைவை 1990கள் நினைவுபடுத்துவது போல, அதே காலகட்டத்தில் தென் ஆபிரிக்காவின் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததை நினைவுபடுத்துவதில்லை. வெற்றியடைந்த புரட்சிகளைப் பற்றி அதற்கு நினைவில் நிற்பது அவற்றின் வெற்றிகளல்ல, மாறாக அவை சந்தித்த தோல்விகளே. திறந்த ஒரு புண்ணைப் போல, அவற்றை நினைவில் வைத்திருக்கச் செய்வதில் ஆதிக்கச் சக்திகள் சோர்வதில்லை. எனினும், ஒருவர் வெற்றிகளிடமிருந்தல்லாமல் தோல்விகளிடமிருந்தே அதிகம் கற்றுக் கொள்கிறார் என்பது முக்கியமானதாகும். முதலில் பொல்ஷ்விக் புரட்சியின் வடிவத்தைப் பின்பற்ற முயன்ற சீனா பிறகு தன்னுடைய சொந்த வழியின் மூலமே வெற்றியடைந்தது. கியூபா சீனாவைப் பின்பற்றாதது போக, லத்தீன் அமெரிக்காவின் கணக்கற்ற புரட்சிக்கான முயற்சிகளில் கியூபா பின்பற்றப்படவில்லை. வெற்றிகரமான புரட்சிகளில் கஷ்டமான ஒரு விஷயம் ஏதெனில் அவற்றைத் திரும்பவும் அதேபோல் நடத்த முடியாது என்பதுதான்.

‘புரட்சிகள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் திடீரென வெளிப்படுகின்றன. 1917ன் அக்டோபர் புரட்சியை ஏப்ரலில் கணித்த லெனினின் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை@ எங்கிருந்து வந்தன என்பது தெரியாமல் கஸ்ட்ரோவின் கெரில்லாப்படை கிய+பாவின் கடற்கரைக்கு வந்து  பிறகு ஹவானா நகருக்குள் நுழைந்தன. சீனா அல்லது வியட்நாமைப் போல பல பத்தாண்டுகளில் நிகழ்ந்த புரட்சிகளிலும் இதே விதி பொருந்துகிறது. ஒரு நீண்ட அடைகாக்கும் காலத்திற்குப்பின் அளவுநிலை மாற்றம் குணரிதியாக மாற்றமடையும் போது, ஆளும் வர்க்கங்களின் கோட்டைகள் மிக வேகமாகச் சரிகின்றன என்பதே அந்த விதி. புரட்சிகளாக நடைபெறாத அதே சமயம், மாபெரும் மக்கள் எதிர்ப்பு இயக்கங்களாக அவை நடைபெறும் போதும் அவற்றைக் கணிக்க முடிவதில்லை 1950களில் தத்துவத்தின் முடிவு என்ற கோட்பாட்டை உரத்துக் கூவிய அமெரிக்க அறிவுஜீவிகளாகல் ஒரு பத்து வருடக் காலத்திற்குள்ளாகவே, எந்த ஒரு ஏகாதிபத்திய நாடும் சந்தித்திராத வகையில் மிகப்பெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தால் தங்கள் நாடு சூழப்படப் போகிறது என்பதை அறிய முடியவில்லை” எனப் புரட்சிகளின் வரலாற்றுப் போக்கை விளக்குகிறார் அய்ஜாஸ் அஹமட் (Aijaz Ahamad).

இவ்வாறு மாற்றமடைந்த புரட்சிகள் பற்றிய படிப்பினைகளைப் எதிர்ப்புரட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களுமே புரட்சியாளர்களை விடச் சரியாக உள்வாங்கிக்கொண்டனர். மூலதனத்தை அதிலும் குறிப்பாக நிதி மூலதனத்தை மையப்படுத்தியதாக உலக ஒழுங்கு மாறியதோடு சுரண்டலின் வடிவங்களும் ஒடுக்குமுறையின் தோற்றப்பாடுகளும் மாறத் தொடங்கின.

அரசும் நிதி மூலதனமும் – பொது எதிரியின் உருவாக்கம்
அரசு முற்றிலும் நிதி மூலதனத்தோடு பின்னிப் பிணைந்த தாகிறபோது, சமுதாயத்திற்கு அப்பாற்பட்டதாக உயரே நின்று கொண்டு சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலன்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிற கட்டமைப்புதான் அரசு என்ற அதன் தோற்றம் கலைகிறது. நிதி மூலதன ஆதிக்கக் காலகட்டத்திற்கே உரிய ஆட்சிகளின் எதேச்சாதிகாரத் தன்மையைக் காணுகிறபோது அரசுக்கு எவ்வித சமுதாய அங்கீகாரமும் தேவைப்படவில்லை என்று சிலர் கருதக்கூடும் சமுதாய அங்கீகாரம் என்பதற்கு ஒரு மாற்றாகத்தான் அரசு செயல்படுகிறது என்றும் எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. மிகமிக மோசமான ஒரு எதேச்சாதிகார அரசுக்குக் கூட ―ஒரு பாசிச ஆட்சிக்குக் கூட― என்ன தான் அது பயங்கர அடக்குமுறைகளைப் பரவலாகப் பயன்படுத்தினாலும், அதற்குப் பிறகும் சமுதாய அங்கீகாரம் தேவைப்படுகிறது. எதேச்சாதிகாரமும் அடக்குமுறைகளும் ஒருபோதும் சமுதாய அங்கீகாரத்துக்கு மாற்றாக முடியாது. அந்த அங்கீராத்தைப் பெற இப்படிப்பட்ட ஆட்சிகள் வேறு வழியைப் பயன்படுத்த முயல்கின்றன. சமுதாய மொத்தத்திற்கும் ஒரு பொது எதிரியை உருவாக்குவதுதான் அந்த வழி. அந்தப் பொது எதிரிக்கு எதிரான போராட்டத்தில் அரசு ஈடுபட்டிருப்பதாகக் கதை கிளப்பி விடப்படும். பெருமை அல்லது தேச கவுரவம் நிலைநாட்டப்படுதல் எனும் ஏகாதிபத்தியத் திட்டத்தின் பின்னே ஒரு பொது நோக்கத்திற்காகச் சமுதாயம் ஒன்று திரட்டப்படும். அல்லது தேசத்திற்குக் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதி ஒன்றைச் சரிப்படுத்துவது என்ற பெயரில் ஏகாதிபத்தியத் திட்டம் ஒன்று துவக்கப்படும். வேறு சொற்களிற் கூறுவதென்றால், பொருளாதார ஆளுமைக்களத்தில் இழந்த சமுதாய அங்கீகாரத்தை வேறு வகையில் ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்யப்படுகிறது. அதற்காக, அடிப்படையில் ஏகாதிபத்தியத்தன்மை வாய்ந்த, இனவாத, அந்நியப் பகைமை கொண்ட ஒரு தேசம் என்பது கட்டப்படுகிறது. அந்தத் தேசம் என்ற கட்டுமானத்தைச் சுற்றி ஒரு பொதுக்கருத்து உருவாக்கப் படுகிறது. அதற்கு ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதே நிதி ஆதாய நோக்கங்கள் தாம் சமுதாயத்தின் பொது எதிரியை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் அல்லது அந்தப்பொது நோக்கத்தை எட்டுவது என்ற பெயரில் நிதி மூலதனத்தோடு பின்னிப் பிணைந்ததாக அரசு இருப்பதும் பரவலாக பயங்கர அடக்குமுறைகள் கட்டவிழ்ந்து விடப்படுவதும் நியாயப் படுத்தப்படுகின்றன. அந்தப் பொதுத் திட்டத்தின் பெயரால் யுத்தம், ஆக்கிரமிப்பு, நாடுகளை வளைத்து இணைத்துக் கொள்வது ஆகிய அனைத்தும் நியாயப்படுத்தப்படுகின்றன. எனினும், இவை யாவும் உருவகப்படுத்துவது அரசின் சமுதாய அங்கீகாரத்துக்கான ஒரு மாற்றுத் தேடலைத்தான். இந்த மாற்றுத் தேடல் நிதி மூலதனத்தோடு பின்ணிப்பிணைந்த அரசைத் தக்கவைக்கவும் சுரண்டலைத் தொடரும் வழியாகவும் இருந்தது.

நவீன (முதலாளித்துவக்) காலத்திற்கு முந்தைய அனைத்துச் சமுதாயங்களும் விவசாயச் சமூகங்களாகவே இருந்தன. அவற்றின் உற்பத்தி குறிப்பான பல்வேறு முறைகளதும் நியாயங்களினதும் அடிப்படையில் அமைந்திருந்தது. மாறாக, முதலாளித்துவச் சந்தைச் சமுதாயத்தில் மூலதனத்திலிருந்து அதிகப்படியான லாபம் பெறுவதே பிரதான விதியாக அமைந்துவிட்டது. நவீன முதலாளித்துவ விவசாயம் பெரிய அளவிலான பணக்காரக் குடும்ப விவசாயமாயிருப் பினும்,   வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல்தேசிய நிறுவனங்களும் மூன்றாம் உலக விவசாயிகளின் உற்பத்தியின் மீது வலுவான தாக்குதலைத் தொடுத்து வருகின்றன. 2001ஆம் ஆண்டு கட்டார் நாட்டின் டோஹா நகரில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் அதற்கான பச்சை விளக்குக் காட்டப்பட்டது. அத் தாக்குதலுக்குப் பலர் பலியாகின்றனர். அவர்களில் மிகப் பெரும்பாலோர், மனிதக் குலத்தின் அரைவாசியான மூன்றாம் உலகின் விவசாயிகளே ஆவர்.

உலக வர்த்தக அமைப்பின் சந்தைப் போட்டிக் கோட்பாட்டை நியாயப்படுத்த ஒரு பெரிய வாதம் முன்வைக்கப்படுகிறது. பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட வளர்ச்சி, நவீனமான வளமிக்க நகர் சார்ந்த தொழிலமைப்புகளின் துணையோடு நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ததுடன், விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்குக் கொண்டு சென்றது. அவ்வாறே,  தற்போதைய மூன்றாம் உலக நாடுகளிலும் அத்தகைய வளர்ச்சி ஏற்படாமல் போகுமா என்பதே அவர்கள் முன்வைக்கும் வாதமாகும்.
மேற்கூறிய முன்மாதிரியை மூன்றாம் உலக நாடுகளில் மீள ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பதற்கான இரண்டு முக்கிய காரணிகளை இவ் வாதம் கணக்கில் எடுக்கத் தவறுகிறது. முதலாவதாக, நூற்றைம்பது ஆண்டுகளாக விருத்திபெற்ற ஐரோப்பிய மாதிரி என்பது தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வல்ல தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை உருவாக்கியது. இன்றைய நவீனத் தொழில் நுட்பத்தின் கீழ், மிகவும் குறைவான வாய்ப்புடைய சந்தைகளில், தங்களின் தொழில் உற்பத்திகள் போட்டியிட, மூன்றாம் உலகின் புதிய தொழில் அமைப்புகள் இந்த நவீன தொழில்நுட்பத்தை ஏற்றாக வேண்டும். இரண்டாவதாக இந்த நூற்றைம்பதாண்டுக் கால இடைவெளியில் ஐரோப்பாவில் மக்கள் தொகை குறைந்தது. வளர்முக நாடுகளில் அப்படி எதுவும் நிகழ வாய்ப்பில்லை.

உலக வர்த்தக அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் பரிந்துரைக்கும் ‘முதலாளித்துவ சந்தையைத் தாராளமயமாக்குவதன் மூலம்  நடைபெறும் நவீனமயமாக்கம்’ என்ற ஆலோசனை இரண்டு கூறுகளைக் கொண்டது. இனி, வளர்ந்த நாடுகளைச் சார்ந்த, போட்டியிடும் திறமுடைய நவீன விவசாயிகள் உலக அளவில் உணவு உற்பத்தியில் ஈடுபடுவார்கள். எதிர்காலத்தில், வளரும் நாடுகளின் சில பகுதிகளில் இத்தகையோர் சிலர் உருவாகும் வாய்ப்பு இருக்கலாம். அதே வேளை, தற்போதைய மூன்றாம் உலக நாடுகளின் முன்னூறு கோடி விவசாயிகளிற் பெரும் பகுதியினர் ஓரங்கட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு ஏழ்மைக்குட் தள்ளப்படுவர். இறுதியாக அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவர். அவ்வாறு பலியாவோரைச், சுற்றுச் சூழல் உள்ளிட்டுப், பொருளாதாரரீதியாக ஏழ்மையில் உழற்றுவதே தாராளமயக் கொள்கைகளின் நோக்கமாக உள்ளது. மேற்சொன்ன இரண்டு கூறுகளும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமல் இணைந்து செல்கின்றன.
அடிப்படையில் அரசுக்கும் அடக்குமுறை ஆட்சியாளர்களுக்குத் தேவையானது ஒரு பொது எதிரி. அது அண்டை நாடொன்றாக இருக்கலாம். ஒரு சிறுபான்மைச் சமூகமாக இருக்கலாம். அடையாளங் காட்டிப் பெரும்பான்மையினரை அச்சத்திற்குட்படுத்தக்கூடிய ஏதாகவும் இருக்கலாம். அதன் மேற் பழியைப் போட்டுவிட்டுத் தங்கள் மூலதனக் கொள்ளையையும் சுரண்டலையும் எவ்விதத் தடைகளுமற்றுத் தொடர அவர்கட்கு முடிகிறது. கொலனித்துவமும், நவகொலனித்துவமும் அன்று இலகுவாகக் கண்டுகொள்ளப் பட்டன@ எதிர்க்கப் பட்டன. ஆனால், இன்று, உலகமயமாதல் நிகழச்சிநிரலின் கீழ், தேசிய அரசுகளினதும் அரசாங்கங்களினதும் வரவேற்புடனும் மக்களின் ஆதரவுடனும், ‘மனிதாபிமான ஏகாதிபத்தியம்’ தன் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறது. ஜனநாயகத் தன்மையோடு கூடிய சுதந்திரம் ப+ர்ஷ்வாக்கள் கூறும் சந்தையின் கற்பனையான சுதந்திரம் அல்ல: மாறாகத் தீவிரமான உண்மையான, சமத்துவத்திற்கான ஒடுக்கப் பட்டவர்களின் போராட்டத்தைப் பற்றியதாகும். இது சோசலிசம், தேச விடுதலை ஆகியவற்றுக்கான போராட்டங்களோடு இணையாமல் நீடிக்க முடியாது.

தேசியமும் தேச ஒற்றுமையும்: புதிய யுத்திகள்
“தேசபக்தி என்பது அயோக்கியர்களின் புகலிடம்” என்ற புகழ் பெற்ற கூற்றை இங்கே நினைவூட்டல் தகும். தேசபக்தி ஒரு வலிய யுத்தியாகப் பயன்பட்டுள்ளது. அது மொழியாக, மதமாக, இனமாக எனப் பல்வேறு வடிவங்களில் தேவைக்கேற்றவகையில் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. அதைத் தனது வசதிக்கேற்பச் சர்வதேசச் சமூகம் பயன்படுத்துகிறது. விடுதலைப் போராட்டங் களைத் திசைதவறச் செய்யவும் மக்களிடம் அவற்றுக்குள்ள ஆதரவைக் குறைக்கவுமான யுத்தியாகப் அது பல வழிகளிற் பயன்படுகிறது. மத அடிப்படையில் தேசிய அடையாளத்தை வற்புறுத்திச் சமூகங்களை மேலும் பிளவுபடுத்த அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் உதவி வந்துள்ளனர். அதே வேளை, மத அடையாளங்கள் தங்களது சமுதாயங்களில் பெரும்பான்மை அதிகாரத்துக்கும் ஆளும் அதிகார வர்க்க நலன்களுக்கும் மாறாகக் குறுக்கிடாமல் நடவடிக்கை எடுக்கின்றனர். சர்வதேசச் சமூகத்தால் இந்துத்துவ வெறியாட்டம் நடத்தும் பாரதிய ஜனதா கட்சியுடனுன் நல்லுறவைப் பேண முடிகிறது. இலங்கையின் சிங்கள பவுத்த வெறி ஒரு பிரச்சினையல்ல. கிறிஸ்துவ மதத்தவருக்கு எதிரான வன்முறை யைத் தூண்டிவிடுகிற ஹெல உறுமயவுடன் கூட நட்புறவு பாராட்ட அதற்கு இயலுமாயுள்ளது. இவற்றில் எதுவுமே தமது நலன்களுக்கு ஆபத்தாயில்லாத வரையில் ஒரு பிரச்சனையில்லை. திபெத்திய லாமா பவுத்தம் இன்று மற்றைய பவுத்தப் பிரிவுகளுக்குச் சமமாகவும் பல நேரங்களில் உயர்வாகவும் சர்வதேசச் சமூகத்தால் மதிக்கப்படுவது தலாய் லாமா என்கிற மதத் தலைவரது ஆன்மிக மேம்பாட்டினால் அல்ல. மாறாகத் தலாய் லாமா என்ற அரசியல்வாதிக்குச் சர்வதேசச் சமூகம் வழங்கும் முக்கியத்துவம் தொடர்பானது.  சர்வதேசச் சமூகத்தின் தேவைகட்கு ஏற்ற கருவியாகத் தலாய் லாமா விளங்குவதன் பயனே அது.

இங்கு கவனிக்கத்தக்க விடயமெதுவெனில் எங்கெல்லாம் தேசமும் இனமும் மொழியும் மதமும் புனிதப்படுத்தப்பட்டு அவற்றின் நலன் மனிதரது அடிப்படையான உரிமைகளையும் தேவைகளையும் உணர்வுகளையும் மறுக்கிற அளவுக்குப் போகிறதோ, அங்கு சமூகப் பற்றுக்குப் பதிலாகச் சமூகத்தைச் சின்னாபின்னமாக்கக் கூடிய வெறித்தனம் ஆட்சி செலுத்துகிறது. சர்வதேசச் சமூகம் அதை இயலுமாக்கிறது. இந்த ஆபத்தை வரலாறெங்கும் பார்க்க முடியும். ஜேர்மனியின் தூய ஆரிய அடையாளத்தைக் காப்பதற்காக யூதர்களை அழிக்க வேண்டியிருந்தது. தேசத் துரோகிகளாக அடையாளங்காணப் பட்டவர்களை இலக்கு வைக்க வேண்டியிருந்தது. அதன் பின்பு முழு உலகத்திற்கும் எதிராக ஒரு போரை நடத்த வேண்டி வந்தது. முழு அமெரிக்கக் கண்டமும் அவுஸ்திரேலியாவும் ஸ்பானிய, போர்த்துக் கேய, பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களால் ஏறத்தாழ முழுமையான இன ஒழிப்பு நடவடிக்கைகட்குட்பட்டன. அத்தனை கொடுமைகளும் தேசங்களின் முடிக்குரிய மன்னர்களதும் மகாராணிகளதும் திருச்சபைகளினதும் பேராலும் அவர்களது பூரண அனுமதியுடனும் ஆசிகளுடனுமே மேற்கொள்ளப்பட்டன. அந்த மரபு அமெரிக்காவாலும் சர்வதேசச் சமூகத்தாலும் இன்று முழு மானிடத்திற்கும் எதிராக முன்னெடுக்கப்படுகிறது. ‘பொது எதிரி” என்ற கருத்தாக்கம் புதிய யுத்திகளினூடு செயற்படுத்தப்படுகிறது. உள்நாட்டில் ஒரு எதிரி இருப்பது எப்போதுமே வசதியானது. இல்லாவிடின் புறத்தே அதைக் கட்டமைக்கும் தேவை எழுகிறது. ஆனால் மதம், மொழி, இனம் என ஏதாவதொன்றைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே எதிரியைக் கட்டமைக்கலாம். பொது எதிரியாக்கப்பட்டவர்களிடமிருந்து பெரும் பான்மை மொழி, பெரும்பான்மை மதம், பெரும்பான்மைப் பண்பாடு, பெரும்பான்மையினரின் நலன்கள் என்பனவற்றைப் பாதுகாப்பதை அரசு தனது பணியாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளுகிறது. அதை விட, இவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிற பெரும்பான்மை நலன்கள் தேசிய நலன்களாகின்றமையால், அவற்றுக்கு எதிரான மிரட்டல்க ளாகக் காணப்படுகிறவை தேசத்திற்கு எதிரான மிரட்டல்களாகின்றன. எனவே, தேசத்தைப் பாதுகாப்பதற்காக மிரட்டல்களுக்கெதிரான கடும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவை உரிமை மறுப்பு முதல் இன ஒழிப்புப்போர் வரை எவ் வடிவையும் எடுக்கலாம்.

நிறைவாக
பாட்டாளி மக்களின் எண்ணிக்கை வளர்ச்சியின் வலிமை அவர்களை ஒன்றுபடுத்துவதை எளிதாக்காமல், ஒரு முரண்நகையாகக், கடினமான பணியாக மாற்றியுள்ளது. மார்க்ஸின் காலத்தில் பாட்டாளிகள் எண்ணிக்கையிற் குறைவாகவும் ஒரு சில நாடுகளின் ஒரு சில நகரங்களில் மட்டுமே நெருக்கமாக வாழ்ந்து வந்தனர். இவர்களிற் பெரும்பாலோர் ஒரேமாதிரியான வேலைகளைச் செய்பவர்களாகவும், ஒப்பீட்டளவில் ஒரேமாதிரியான சூழல்களில் வசிப்பவர்களாயும் இருந்தனர். இன்றைய உலகப் பாட்டாளிகளோ, பல தனித்த நாடுகளில், புவியியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறவர்களாயும், கலாசார ரீதியாகப் பன்முகத்தன்மை கொண்டவர்களாயும்,  மதரீதியாகவும், இனரீPதியாகவும் வேறுபடுகிறவர்களாயும், மொழிரீPதியாகப் பிளவுபட்டு இருக்கிறவர்களாயும், இன, மதச, சாதி அடுக்குகளாய் வாழ்கிறவர்களாயும்,  சிக்கலான வேலைப் பிரிவினையைக் கொண்ட பல வேலைகளைச் செய்பவர்களாயும் நவீன உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக மிக அதிகமான எண்ணிக்கையில் பெண்களை உடையவர்களாயும் உள்ளனர். இந்த உலகப் பாட்டாளி வர்க்கத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் ஊதியம், சமூக ஒதுக்கீடு ஆகியவற்றில் வேறுபாடுகளும் சமூகரீதியிலமைந்த பல தவறான முன் நிர்ணயிப்புகளும் ஏராளமாக நிறைந்திருக்கின்றன. இவை இன்று எதிர்நோக்கப்படும் பாரிய சவால்கள்.

தேசிய இன ஒடுக்கல் என்றாலும், வேறெந்தச் சமூக அடையாளத்தின் அடிப்படையிலான ஒடுக்கல் என்றாலும், அது குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீதான ஒடுக்குமுறை என்ற எல்லைக்குள் நின்றுவிட முடியாது. ஏனெனில், இன ஒடுக்கல் அதைவிடப் பாரிய ஒரு சமூக முரண்பாட்டின் வெளிப்பாடு மட்டுமே. தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டங்கள் அதைச் சரியாக அடையாளம் காணத் தவறுகிற போது தம்மை முடிவிற் பலவீனப்படுத்திக் கொள்கின்றன.

தேசிய இனப் பிரச்சினையும் தேசிய இன ஒடுக்கலும் இனங்களிடையி லான பிறவிப் பகையின் விளைவானவையல்ல. அவற்றுக்கு வேறு சமூகப் பரிமாணங்கள் உண்டு. குறிப்பாக, வர்க்கப் பரிமாணம் உண்டு. ஏகாதிபத்தியத்தினதும் மேலாதிக்கவாதிகளதும் நலன்களுக்கு அவற்றுடன் தொடர்பு உண்டு. அதனாலே தான் எந்தத் தேசிய இன விடுதலையும் ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக்காத வரை அது முழுமையான விடுதலைக்கு இட்டுச் செல்லாது. இதை அண்மைக் காலத்தில் ஈராக்கின் குர்திய விடுதலை இயக்கங்கள், கொசோவோ விடுதலை இயக்கம் போன்றவை மிகவும் தெளிவாக உணர்த்தின. ஏகாதிபத்தியத்தால் நன்கு ஏமாற்றப்பட்ட அவர்களிடமிருந்து கற்க நிறைய உண்டு.

தேசியவாதம் போன்று அல்லது தேசியவாதத்தை விட மோசமாக மதவாத அரசியல் மேலாதிக்க அரசியலாகவும் ஒடுக்குமுறை அரசியலாகவும் சீரழிந்துள்ளதை நாம் காணுகிறோம். தேசிய இன ஒடுக்கலுக்குட்பட்ட சமூகம் ஒன்றினுள் மதவாதம் கிளறிவிடப்படும் போது, விடுதலைப் போராட்டம் பலவீனப்படுகிறது. மதம் என்பது வசதியான ஒரு அரசியற் கருவியே ஒழிய மனித உறவுகளில் தீர்மானகரமான உறுதியான அரசியற் சக்தி அல்ல என்பதை உணர வேண்டும். மக்களின் விடுதலைக்கான அரசியல் எந்த மத அடையாளத்திலிருந்தும் எட்ட நிற்பது அவசியம் மட்டுமல்ல, ஒரு முன் நிபந்தனையும் கூட. அதே வேளை, மத அடிப்படையிலான எந்த ஒடுக்குமுறையையும் எதிர்ப்பதும் மத நம்பிக்கைக்கும் வழிபாட்டுக் குமான சுதந்திரத்தைக் காப்பதும் ஒரு உண்மையான தேசிய விடுதலை இயக்கத்தின் பொறுப்புகளுள் அடங்கும். மத வேறுபாடற்று ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தினதும் பிற ஒடுக்கப்பட்ட சமூகங்களதும் உரிமைக்காகப் போராட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இயலுமாகிறபோது அது பல வழிகளில் வலிமை பெறுகிறது. அதன் மூலம், கண்ணுக்குத் தெரிகிற பேரினவாத ஒடுக்குமுறையாளர்களை விட முக்கியமான எதிரிகளான பின்னாலிருந்து இயக்குகின்ற அந்நிய மேலாதிக்கவாதிகள் பற்றிய தெளிவுடன் செயற்பட இயலுமாகிறது.

சர்வதேசச் சமூகம் தற்போது யுத்தத்தை விற்கிறது. யுத்தங்களை ஊக்குவிக்கிறது. யுத்தங்களை நடத்துகிறது. அதனோடு மனிதாபிமான உதவிகள், மனித உரிமை மீறற் கண்காணிப்பு போன்ற பல்வேறு போர்வைகளில் தேசிய அரசுகளையும், அரசாங்கங்களையும் மிரட்டுகின்றது@ கட்டுப்படுத்துகின்றது. மக்களுக்கு உதவுவது போன்று பாசாங்கு செய்து அவற்றின் சந்தை, நுகர்வு, லாபம், இராணுவ ஆதிக்கம் போன்றவற்றை நிலைநாட்டிக் கொள்கிறது. அரசியல் என்பது சமூக அறஞ் சார்ந்த விடயமாக இருந்த காலம் மலையேறி விட்டது. ஆனால் அறம் பிழைப்படுகிற போது அரசியல் சீரழிகிறது. அதை ஒரு சமூகம் பொறுத்துக் கொள்ளுமாயின் அச் சமூகம் தனது அழிவுக்கான பாதையைத் தானே தேடுகிறது. அழிவுக்கான பாதையிற் பயணப்படத் தொடங்கிய சமூகம் அதற்காக வருந்தத் தொடங்கும் போது அது தனது பாதையிலிருந்து மீள முடியாத தொலைவுக்குச் சென்றிருக்கும். வரலாறு சொல்லும் பாடமும் அதுதான். இது விடுதலைப் போராட்டத்திற்கும் பொருந்தும் என்பதை நாம் மறக்கவியலாது.